முனையனூர், மதுக்கரை நால்ரோடு பகுதிகளில் குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


முனையனூர், மதுக்கரை நால்ரோடு பகுதிகளில் குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 May 2019 3:30 AM IST (Updated: 12 May 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

முனையனூர், மதுக்கரை நால்ரோடு பகுதிகளில், குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம், 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சித்தலவாய் ஊராட்சி முனையனூர் மற்றும் கீழமுனையனூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அந்த பகுதியில் 2 மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு, குழாய்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சியின் காரணமாக குடிநீர் வினியோகம் சரியாக செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

பொதுமக்கள் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைத்த நீரையே பயன் படுத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அந்த காவிரி நீரும் சரிவர வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப் பகுதி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் முனையனூர் கடைவீதியில் உள்ள உப்பிடமங்கலம்-சேங்கல் சாலையில் அமர்ந்து மறியல் ஈடுபட்டனர்.

இதேபோல் குண்டாங்கல்பட்டி, கீரிக்கல்பட்டி ,பூஞ்சோலை மேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு மதுக்கரை நால்ரோடு பகுதியில் உப்பிடமங்கலம்-சேங்கல் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, தாசில்தார் பழனி, மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story