பூதலூரில், ஆனந்தகாவிரி வாய்க்கால் நடைபாலம் இடிந்து விழுந்தது - பொதுமக்கள் அவதி


பூதலூரில், ஆனந்தகாவிரி வாய்க்கால் நடைபாலம் இடிந்து விழுந்தது - பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 11 May 2019 10:15 PM GMT (Updated: 11 May 2019 10:48 PM GMT)

பூதலூரில் ஆனந்தகாவிரி வாய்க்கால் நடைபாலம் இடிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் கிராமத்தில் கோவில்பத்து காளியம்மன் கோவில் தெருவையும், தெற்குதெரு, சிவன்கோவில்தெரு தொண்டமார் தெருவையும் இணைக்கும் வகையில் பொதுமக்கள் பங்களிப்பில் ஆனந்தகாவிரி வாய்க்காலில் 4 அடி அகலமுள்ள நடைபாலம் கட்டப்பட்டது. கடந்த 2002-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நடைபாலம் வழியாக விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் சென்று வந்தனர். பூதலூர் ரெயில் நிலையத்துக்கு செல்ல இந்த நடைபாலம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த பாலம் கட்டப்பட்டதில் இருந்து கைப்பிடிச்சுவர் அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும் பாலத்தை வலுப்படுத்தி அமைக்க வேண்டும் என்றும் இந்த பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் பொதுமக்களின் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் பாலம் நாளுக்கு நாள் வலுவிழக்க தொடங்கியது. இந்தநிலையில் இந்த நடைபாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பாலத்தை பயன்படுத்தி வந்த மக்கள் மாற்றுப்பாதை வழியாக சுற்றி சென்று அவதிப்படுகிறார்கள்.

மேலும் அந்த பகுதி இளைஞர்கள் ஒன்று கூடி பாலத்தின் வழியாக செல்லக் கூடாது என்று முங்கில்களால் தடுப்பு அமைத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

கோவில்பத்து தெற்கு தெரு, சிவன்கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல தெரு மக்கள் பயன்பெறும் வகையில்

பொதுமக்களிடம் நன்கொடை பெற்று இந்த பாலப்பணிகள் கடந்த 2001-ம் ஆண்டு தொடங்கி 2002-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்த பாலத்தை பராமரிப்பதில் அரசு ஆர்வம் காட்டவில்லை. எனவே இந்த பாலம் வலுவிழந்து இடிந்து விழுந்துள்ளது.

ஆனந்தகாவிரி வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் பாலத்தின் அருகில் கீழ் இறங்கி தற்போது மக்கள் சென்று வருகிறார்கள். வாய்க்காலில் தண்ணீர் வந்த பிறகு மக்களால் செல்ல முடியாது. கடந்த 17 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்த இந்த பாலத்தை மீண்டும் கட்டி முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story