பூலாம்பட்டி காவிரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து தொடங்கியது


பூலாம்பட்டி காவிரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து தொடங்கியது
x
தினத்தந்தி 12 May 2019 4:22 AM IST (Updated: 12 May 2019 4:22 AM IST)
t-max-icont-min-icon

பூலாம்பட்டி காவிரி ஆற்றில் தண்ணீர் தேக்கி வைக்கும் பணி தொடங்கியதையொட்டி, விசைப்படகு போக்குவரத்தும் தொடங்கி உள்ளது.

எடப்பாடி,

பூலாம்பட்டியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை மின்நிலையம் மூலம் மின்சாரம் தயாரிக்க 16 ஷட்டர்கள் கொண்டு தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதால் பூலாம்பட்டியில் காவிரி ஆறு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பரந்து விரிந்து காணப்படுகிறது. இது பார்ப்பதற்கு கடல்போல் காட்சியளிக்கும்.

இதற்கிடையில் காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டத்திற்கும், ஈரோடு மாவட்டத்திற்கும் விசைப்படகு போக்குவரத்து நடைபெறுவதால் வெளியூர் செல்லும் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் பூலாம்பட்டிக்கு வந்து விசைப்படகு பயணம் செய்வதுண்டு.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கதவணை மின்நிலையத்தின் 3 ஷட்டர்கள் பழுதடைந்ததால் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேறியது. அதைத்தொடர்ந்து பழுதடைந்த ஷட்டர்களை மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

தற்போது இந்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பூலாம்பட்டி காவிரி ஆற்றில் தண்ணீர் தேக்கி வைக்கும் பணி தொடங்கியது. இதனால் பெரிய விசைப்படகு போக்குவரத்தும் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பூலாம்பட்டிக்கு தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.


Next Story