நங்கவள்ளி வாரச்சந்தையில் திருட்டு மாடுகளை விற்க முயன்ற மர்மநபர் போலீசார் விசாரணை


நங்கவள்ளி வாரச்சந்தையில் திருட்டு மாடுகளை விற்க முயன்ற மர்மநபர் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 May 2019 3:45 AM IST (Updated: 12 May 2019 8:36 PM IST)
t-max-icont-min-icon

நங்கவள்ளி வாரச் சந்தைக்கு திருட்டு மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்ய முயன்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேச்சேரி,

இதுபற்றிய விவரம் வருமாறு:–

சேலம் மாவட்டம் நங்கவள்ளி வாரச்சந்தையில் ஞாயிற்றுக்கிழமைதோறும் ஆடு, மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். பெரிய சோரகை, சின்ன சோரகை, மேச்சேரி, குட்டப்பட்டி, நங்கவள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆடு, மாடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வருகிறார்கள்.

இவற்றை வாங்க சேலம் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கிறார்கள்.

வழக்கம்போல் நேற்று வாரச்சந்தை நடந்தது. ஏராளமான வியாபாரிகள் ஆடு, மாடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். அப்போது ஒருவர் 2 பசுக்களை கொண்டு வந்திருந்தார். அவை சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ளவை ஆகும். அந்த 2 மாடுகளையும் சேலம் முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த ஒருவர் விலைக்கு வாங்க பேசினார். அப்போது ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்க ஒப்புக்கொண்டு ரூ.600–ஐ முன்பணமாக கொடுத்தார்.

2 மாடுகளை கொண்டு வந்தவர் ரூ.600–ஐ பெற்றுக்கொண்டார். பின்னர் அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார்.

அப்போது 2 மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தவர் மீது மற்றவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மாடுகள் பற்றி விசாரித்தனர். ஆனால் மாடுகளை விற்க கொண்டு வந்தவர் அங்கு இல்லை. மாடுகளை வாங்க விலைபேசியவருக்கும் அதுபற்றி தெரியவில்லை.

இதையடுத்து நங்கவள்ளி பேரூராட்சி முன்னாள் தலைவர் ரத்தினவேலுவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு வந்து பார்த்து விசாரித்தார். பின்னர் நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்து போலீசாரும் அங்கு வந்து விசாரித்தனர். அப்போது அந்த 2 மாடுகளும் திருட்டு மாடுகள் என தெரியவந்தது. இதற்கிடையே அந்த மாடுகளை சந்தைக்கு விற்பனை செய்ய கொண்டு வந்தவர் நைசாக அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதையடுத்து அந்த 2 மாடுகளையும் அதே ஊரைச் சேர்ந்த முத்துசேகர் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அந்த மாடுகளை மரத்தில் கட்டிப்போட்டுள்ளார். பின்னர் பிற போலீஸ் நிலையங்களுக்கும் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

சந்தையில் திருட்டு மாடுகளை விற்பனை செய்ய கொண்டு வந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story