கெங்கவல்லி அருகே கல்லூரி மாணவர்கள் 2 பேர் ஏரியில் சேற்றில் சிக்கி பலி
கெங்கவல்லி அருகே, நண்பர்களுடன் குளித்தபோது நண்பர்கள் 2 பேர் ஏரியில் சேற்றில் சிக்கி இறந்தனர்.
கெங்கவல்லி,
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 21). இவர் ராசிபுரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் படித்து வருகிறார்.
அபிஷேக் வீட்டில் நேற்று காலை விஷேச நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்ள தனது நண்பர்களை அழைத்து இருந்தார். இதையொட்டி அபிஷேக்கின் நண்பர்கள் சிவசங்கர் (21), கோகுல் (21), அஜீத் (21), சசிகுமார் (21), மணிகண்டன் (21) ஆகியோர் நேற்று கெங்கவல்லி வந்தனர்.
இதில் சிவசங்கர் ஆத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர். கோகுல் ராசிபுரம் சிங்களாந்தபுரத்தில் வசித்து வந்தார். அஜீத்குமார், சசிகுமார் ஆகியோர் ராசிபுரத்தை சேர்ந்தவர்கள். மணிகண்டன் கெங்கவல்லியில் வசித்து வருகிறார்.
விஷேச நிகழ்ச்சி தொடங்க தாமதம் ஆனால் அபிஷேக் மற்றும் நண்பர்கள் 5 பேரும் வலசக்கல்பட்டி ஏரியில் குளிப்பதற்காக 2 மோட்டார்சைக்கிள்களில் சென்றனர். அங்கு சென்றதும் ஏரியில் இறங்கி குளித்தனர். அப்போது ஏரியில் உள்ள சேற்றில் சிவசங்கரும், கோகுலம் சிக்கிக்கொண்டனர். அதில் இருந்து 2 பேரும் வெளியே வர முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து காப்பாற்றக்கோரி சத்தம் எழுப்பினர்.
இதை கேட்டதும் மற்ற 4 பேரும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் 2 பேரையும் வெளியே இழுக்க முயன்றனர்.
இதுபற்றி கெங்கவல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் சிவசங்கரும், கோகுலும் ஏரி சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.
2 பேரின் உடல்களை தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தகவல் அறிந்ததும் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேர் உடல்களை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி கெங்கவல்லி சப்–இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்தார். அஜித், சசிகுமார், மணிகண்டன், அபிஷேக் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.