உலகிலேயே சிறந்த கலை, புத்தகம் வாசிப்பதுதான் கோடை கால சிறப்பு முகாமில் உதவிகலெக்டர் பேச்சு
உலகிலேயே சிறந்த கலை புத்தகம் வாசிப்பதுதான் என்று சிறுவர்களுக்கான கோடை கால சிறப்பு முகாமில் உதவி கலெக்டர் மெகராஜ் பேசினார்.
வேலூர்,
வேலூரில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் சிறுவர்களுக்கான கேடைகால சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வருகிற 30-ந் தேதி வரை ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், யோகா பயிற்சி, செஸ், அழகிய கையெழுத்துபயிற்சி, பல்லாங்குழி, பரமபதம், ஆடுபுலி ஆட்டம் விளையாட்டுகள், இசைப்பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
காட்பாடி செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த சிறப்பு முகாமின் தொடக்கவிழா நேற்று நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் ஆனந்தன் தலைமை தாங்கினார். முதல்நிலை நூலகர் பழனி வரவேற்றார். வாசகர் வட்ட தலைவர் ரத்தினவேலு, காட்பாடி செஞ்சிலுவை சங்க அவைத்தலைவர் சிவசுப்பிரமணியன், செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகோபாலன், மாவட்ட நூலக கண்காணிப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ் கலந்துகொண்டு கோடை கால சிறப்பு முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-
மாணவர்களுக்கு மகிழ்ச்சியானது விடுமுறைதான். அதைவிட அதிக மகிழ்ச்சி தருவது கதை புத்தகம் வாசிப்பது, அம்மாவிடம் கதை கேட்பது. நீங்கள் வெளியில் தனித்தனி விளையாட்டுகளை விளையாடுவீர்கள். இங்கு ஒரே இடத்தில் உங்களுக்கு அனைத்து விளையாட்டுகள், கலைகள் கற்றுத் தரப்படுகிறது. இங்கு நல்ல புத்தகங்கள் உள்ளன. அதை படிக்கலாம். உலகிலேயே சிறந்த கலை, புத்தகம் வாசிப்பதுதான்.
இந்த முகாமில் நீங்கள் ஓவியம் வரையலாம், வண்ணம் தீட்டலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் சரியான பயிற்சி வேண்டும். அந்த பயிற்சி வழங்குவதற்குதான் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஆக்கப்பூர்வமான பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். கற்றலில் சிறந்தவர்களுக்கு எங்கு சென்றாலும் சிறப்பான மரியாதை உண்டு. அதனால் நீங்கள் இந்த முகாமை பயன்படுத்தி தங்களை ஒரு சிறந்த மாணவர்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் நல்நூலகர் கணேசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story