செங்கத்தில் சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


செங்கத்தில் சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 May 2019 4:15 AM IST (Updated: 12 May 2019 10:22 PM IST)
t-max-icont-min-icon

செங்கம் நகரில் சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கம், 

செங்கம் நகரில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு பேரூராட்சி சார்பில் 18 வார்டுகளுக்கும் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக செங்கம் நகரில் சில இடங்களில் 2 நாளைக்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் ஒரு மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதை ½ மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செங்கம் நகர பொதுமக்கள் பேரூராட்சி அலுவலர்களிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. செங்கம் நகரில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தி வந்தும் குடிநீர் சீராக வினியோகிக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால் பொதுமக்கள் விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

செங்கம் நகரில் ஆங்காங்கே வைத்துள்ள கைப்பம்புகளில் மின்மோட்டார்கள் வைத்து சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வந்தனர்.

ஆனால் பல இடங்களில் அந்த தொட்டிகள் உடைந்தும், மின்மோட்டார்கள் பழுதடைந்தும், குடிநீர் வினியோகம் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

செங்கத்தில் பிரசித்தி பெற்ற வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் கருடசேவை திருவிழா நெருங்கிவரும் வேளையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story