அரசியல் புரட்சியின் விளிம்பில் தமிழகம் அரவக்குறிச்சி தொகுதி பிரசாரத்தில் கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு


அரசியல் புரட்சியின் விளிம்பில் தமிழகம் அரவக்குறிச்சி தொகுதி பிரசாரத்தில் கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 12 May 2019 11:15 PM GMT (Updated: 12 May 2019 7:40 PM GMT)

தமிழகம் அரசியல் புரட்சியின் விளிம்பில் நின்று கொண்டு இருக்கிறது என்று அரவக்குறிச்சி தொகுதி பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசினார்.

க.பரமத்தி,

தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். எல்லா ஊர்களிலும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. நீர்நிலைகள் பராமரிக்கப்படாமலும், தூர்வாரப்படாமலும் உள்ளன. ஆட்சியாளர்கள் நினைத்து இருந்தால் இவற்றை தூர்வாரி இருக்க முடியும். இன்று அன்னையர் தினம். அவர்களுக்கு வாழ்த்து சொல்லும் நாள். ஆனால் அவர்களை வருடத்திற்கு ஒரு நாள் வாழ்த்திவிட்டு, மற்ற நாட்களில் அவர்களை தண்ணீர் பிடிக்க ஊர் கோடிக்கு அனுப்பி வைப்பதில் அர்த்தமே கிடையாது.

தமிழ்நாடு ஒரு அரசியல் புரட்சியின் விளிம்பில் நின்று கொண்டு இருக்கிறது. அதை சரியாக போக வேண்டிய பாதைக்கு உந்தி தள்ள வேண்டிய பொறுப்பு வாக்காளர்கள் கையில் இருக்கிறது. மக்கள் நீதிமய்யத்தின் குறிக்கோள், கொள்கை கல்வித்தரத்தை உலக அளவிற்கு உயர்த்த வேண்டும் என்பது தான். மக்கள் நலனில் என்னென்ன அடங்குமோ அவை அனைத்தையும் நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கிறோம். திட்டவேண்டும் என்றால் ஆளுங்கட்சியையும், மாற்று கட்சிகளையும் திட்டிக்கொண்டே இருக்கலாம்.

நாம் என்ன தான் சொன்னாலும் அவர்கள் திருந்தப்போவது இல்லை. நாம் தான் திருத்த வேண்டும். இவர்களை அகற்ற வேண்டும். புதிய அரசியல் புரட்சியை நீங்கள் தான் செய்யவேண்டும். நான் உங்களுக்கு அடிமை வேலை செய்பவன் என ஒவ்வொரு நாளும் நினைக்கவேண்டும். நீங்கள் முதலாளியாக மாற வேண்டும். கொள்ளையடிப்பவன் நன்றாக வாழ்கிறான் என நினைக்காதீர்கள். அது தவறு. வாய்மையே வெல்லும். அதற்கான பயணத்தில் தான் நான் இருக்கிறேன். என்னை தலைவனாக ஏற்று, முன்னே செல்ல சொல்லாதீர்கள். நான் உங்களுடன் நடந்து வரவே தயாராக இருக்கிறேன்.

இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மோகன்ராஜ் போட்டியிடுகிறார். டார்ச்லைட் அவரது சின்னம். வேட்பாளர் சொன்னதை செய்யவில்லை என்றால் கோர்ட்டுக்கு எல்லாம் போக மாட்டோம். ராஜினாமா கடிதம் எழுதி கேட்போம். அவரை மிரட்டுவதற்காக இதனை கூறவில்லை. நான் சொன்ன ஆள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் நமது முன்னேற்றம் தடைபடும்.

இங்கு ஏற்கனவே பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இப்படி நின்று போச்சே, இனிமேல் இப்படி செய்யக்கூடாது என அவர்களுக்கு புத்தி வந்ததா?. வேனில் உயரமாக நின்று கொண்டு அந்த பணத்தை வாங்காதே என கமல்ஹாசன் சொல்லிக்கொண்டு போய்விடுவார், எங்களுக்கு இருக்கிற வறுமையில் வாங்கி தான் ஆக வேண்டும் என உங்களில் சிலர் நினைக்கலாம். ஆனால் அந்த கணக்கையும் நான் உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.

நீங்கள் வாங்குகிற பணம் ஏதோ அவர்களது பாட்டன், முப்பாட்டன்களிடம் இருந்து எடுத்து உங்களுக்கு கொடுக்கவில்லை. அது உங்கள் பணம். அதனை வாங்க நீங்கள் கையேந்தவேண்டியது இல்லை. அந்த பணத்தை நீங்கள் வாங்கி விட்டீர்கள் என்றால், ஐந்து வருடத்திற்கு கேள்வியே கேட்க முடியாது. அப்படி ஒரு நிலைக்கு நீங்கள் போய்விடாதீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் அருகில், ஆண்டிப்பட்டிகோட்டை மேம்பாலம், பள்ளப்பட்டி ஷா நகர் கடைவீதி, பள்ளப்பட்டி அண்ணாநகர் சந்திப்பு ஆகிய இடங்களிலும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பேசினார். 

Next Story