மணப்பாடு கடலில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்


மணப்பாடு கடலில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
x
தினத்தந்தி 13 May 2019 3:30 AM IST (Updated: 13 May 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறையையொட்டி மணப்பாடு கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

உடன்குடி, 

கோடை விடுமுறையையொட்டி மணப்பாடு கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

மணப்பாடு கடற்கரை

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியத்துக்கு உட்பட்டது மணப்பாடு. இது ஒரு கடலோர கிராமம் ஆகும். இங்கு கடற்கரையில் கல்லும், மணலும் சேர்ந்து மிகவும் உயரமான மணல் குன்று இயற்கையாக அமைந்துள்ளது. இந்த மணல் குன்றின் மீது புகழ்பெற்ற திருச்சிலுவை நாதர் ஆலயம், ஆலயத்துக்கு பின்புறம் கலங்கரை விளக்கம், அதன் அருகே புனித சவேரியார் வாழ்ந்த குகை, நாழி கிணறு, தியான மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.

அமைதியான ஆழம் இல்லாத கடற்கரை, கடல் சறுக்கு போட்டிகள் நடத்த ஏற்றது. மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதி, சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போடும் பகுதி, ஆபத்தான கடற்கரை பகுதி என 3 வகையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை அருகே சுவையான குடிநீர் கிணறும் உள்ளது.

ஆனந்த குளியல்

தற்போது கோடைகால விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வர தொடங்கி உள்ளனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து கடலில் உற்சாகமாக குளித்து செல்கின்றனர். கடற்கரையில் ஒரு இடத்தில் கடல் நீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதில் சுற்றுலா பயணிகள் ஆபத்து இல்லாமல் ஆனந்த குளியல் போடுகின்றனர்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்து ஆனந்தமாக குளித்து சென்றனர்.

Next Story