ராஜாவின்கோவில் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா தீவிர பிரசாரம்


ராஜாவின்கோவில் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா தீவிர பிரசாரம்
x
தினத்தந்தி 13 May 2019 4:00 AM IST (Updated: 13 May 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

ராஜாவின்கோவில் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

ஓட்டப்பிடாரம், 

ராஜாவின்கோவில் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரம்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண்முகையா நேற்று காலையில் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் புதியம்புத்தூர் அருகே உள்ள ராஜாவின்கோவில் கிராமத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவரை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது:-

தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை சீவலப்பேரி அருகில் தடுப்பணை அமைத்து கால்வாய் மூலம் ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூரில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு கொண்டு சென்று பாசன வசதிக்கு ஏற்பாடு செய்யப்படும்.

விவசாய கடன் ரத்து

புதியம்புத்தூரில் திருப்பூருக்கு இணையாக ரெடிமேடு தொழில் நடந்து வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களின் 30 ஆண்டு கோரிக்கையான ரெடிமேடு சந்தை அமைக்கப்படும். விவசாய கடன், கல்வி கடன் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர் சாமிநத்தம், வேலாயுதபுரம், புதூர்பாண்டியாபுரம், மேலஅரசடி, புளியமரத்து அரசடி ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர்

வடக்கு சிலுக்கன்பட்டி, கீழ தட்டப்பாறை, தெற்கு சிலுக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மகேந்திரன் தலைமையில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் வாக்கு சேகரித்தார்.

அதேபோல் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர், வடக்கு பரும்பூர், குலசேகரன்நல்லூர், அயிரவன்பட்டி, தென்னம்பட்டி ஆகிய கிராமங்களில் வேட்பாளர் சண்முகையாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் வாக்கு சேகரித்தார்.

Next Story