ஓணமாக்குளம், வீரபாண்டி தாழையூத்து பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் வீதி, வீதியாக வாக்கு சேகரிப்பு
ஓணமாக்குளம், வீரபாண்டி தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
ஓட்டப்பிடாரம்,
ஓணமாக்குளம், வீரபாண்டி தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
பிரசாரம்
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் நேற்று காலை ஓணமாக்குளம் பகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரசாரத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வேட்பாளர் மோகன் வீரபாண்டி தாழையூத்து, புளிக்குளம், இளவேலங்கால், அயிரவன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வீதி, வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரசாரத்தின்போது, அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-
நல்லாட்சி
2016-ம் ஆண்டு தேர்தலில் என்னை போன்று 134 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது பொதுவான தேர்தல். ஆனால் தற்போது நடக்கும் தேர்தல் வரவழைக்கப்பட்ட தேர்தல். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் எனக்கு பிறகும் ஆட்சி நீடிக்க வேண்டும் என்று தெய்வீக வாக்காக சட்டமன்றத்தில் கூறி இருந்தார். ஜெயலலிதா மறைந்த பிறகு, அவரது ஆட்சி தொடர வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேர்ந்து நல்லாட்சி நடந்து கொண்டு இருக்கிறது.
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலணி முதல் கம்ப்யூட்டர் வரை வழங்கி உள்ளார். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
விசுவாசம்
எனக்கு பிறகு நூறு ஆண்டுகள் ஆட்சி நீடிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெளிவாக கூறி இருந்தார். அந்த ஆட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஆனால் சுந்தரராஜ் தடம்மாறி விட்டார். இதனால் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்க நேர்ந்தது. அனைத்து கிராமங்களிலும் சில நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். சுற்றுப்பயணத்தின்போது, ஓட்டப்பிடாரம் தொகுதி மிகப்பெரிய வெற்றியை கொடுக்க உள்ளது. இங்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று தெரியவந்து உள்ளது.
ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட 5 ஒன்றியங்களில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீரபாண்டி தாழையூத்து கிராமத்தில் 153 ரேஷன் கார்டுகள் உள்ளதால், அதனை ஓணமாக்குளத்தில் இருந்து பிரித்து, இந்த பகுதியில் புதிய ரேஷன் கடை தேர்தலுக்கு பிறகு தொடங்கப்படும். அதற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் கட்டிடம் கட்டித் தரப்படும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Related Tags :
Next Story