கடலூர் அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்


கடலூர் அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 13 May 2019 4:15 AM IST (Updated: 13 May 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார்மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர், 

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அயன்குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் செந்தில்(வயது 41). இவர் நேற்று இரவு அவரது மனைவி கசப்பாயி(37), மகன் நித்திஷ்(7), மாமியார் புதுச்சேரி கோ.சத்திரத்தை சேர்ந்த விஜயகாந்தி(50) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் ராமாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். எம்.புதூர் அருகே உள்ள குறிஞ்சிநகர் பகுதியில் வந்தபோது வெள்ளக்கரையில் இருந்து கடலூர் நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள்மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த செந்தில் உள்பட 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர்களை அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். விபத்து குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரய்யா வழக்கு பதிவுசெய்து விபத்துக்கு காரணமான கார் டிரைவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியில் போலீஸ் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தின் அருகே உள்ள முந்திரிதோப்புக்குள் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதை அறிந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடோடி சென்று பார்த்தனர். அப்போது அந்த வாலிபர் குறிஞ்சிநகரில் நடந்த விபத்துக்கு காரணமான கார் டிரைவர் எஸ்.புதூரை சேர்ந்த ராமமூர்த்தி மகன் அன்பரசன்(வயது 32) என தெரியவந்தது.

உடனே இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமரய்யா தலைமையில் போலீசார் முந்திரிதோப்புக்குள் சென்று தூக்கில் பிணமாக தொங்கிய அன்பரசன் உடலை இறக்கி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட அன்பரசன் வெள்ளக்கரையில் இருந்து காரில் கடலூர் நோக்கி வந்தபோது செந்தில் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கணவன்-மனைவி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்ததை பார்த்து பயந்து போன அன்பரசன் அங்கிருந்து தப்பி ஓடி முந்திரி தோப்புக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும் அன்பரசன் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story