கம்மாபுரம் அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி பலி
கம்மாபுரம் அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி பலியானார். டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கம்மாபுரம்,
கம்மாபுரம் அருகே கோ.ஆதனூரை சேர்ந்தவர் தர்மலிங்கம் மனைவி சின்னம்மாள் (வயது 75). இவர் வீட்டில் இருந்து கிழக்கு தெரு வழியாக சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சொட்டவனம் கிராமத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ், எதிர்பாராதவிதமாக சின்னம்மாள் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய அந்த அரசு பஸ்சை அதன் டிரைவர் நிறுத்தாமல் அங்கிருந்து எடுத்து சென்றார்.
இதனால் ஆத்திரமடைந்த சின்னம்மாளின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டு கம்மாபுரம் சாலையின் குறுக்கே மரக்கட்டைகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்தியன், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் விபத்து ஏற்படுத்திய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பலியான சின்னம்மாளின் குடும்பத்துக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்ற கிராம மக்கள், உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story