பிளஸ்-1 தேர்வில் தோல்வி: பள்ளி மாணவி தற்கொலை


பிளஸ்-1 தேர்வில் தோல்வி: பள்ளி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 13 May 2019 3:30 AM IST (Updated: 13 May 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவை செட்டிப்பாளையம் அருகே கே.கே.பாளையம் கம்பர்வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் சிந்து (வயது 16). இவர் ராஜவீதி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளியானது. இதில் சிந்து தோல்வி அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிந்து, தான் நன்றாக படித்தும் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லையே என்று மனவேதனை அடைந்தார்.

அவருக்கு பெற்றோர் மற்றும் சக மாணவிகள் ஆறுதல் கூறி வந்தனர். மேலும் தோல்வி அடைந்த பாடத்துக்காக நடத்தப்படும் சிறப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் என்று அறிவுறுத்தினர். ஆனாலும் தேர்வில் தோல்வி அடைந்த சோகத்தில் இருந்து அவரால் மீளமுடியவில்லை.

இந்தநிலையில் பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த சிந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சிந்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story