காரைக்காலில் கோலாமீன் சீசன் தொடங்கியது 16 மீன்கள் ரூ.100-க்கு விற்கப்படுகிறது


காரைக்காலில் கோலாமீன் சீசன் தொடங்கியது 16 மீன்கள் ரூ.100-க்கு விற்கப்படுகிறது
x
தினத்தந்தி 13 May 2019 4:15 AM IST (Updated: 13 May 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் கோலாமீன் சீசன் தொடங்கி உள்ளது. 16 கோலா மீன்கள் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

காரைக்கால்,

ஆண்டுதோறும் ஏப்ரல் மாத இறுதி முதல் ஜூன், ஜூலை மாத இறுதி வரை பைபர் படகு மீனவர்கள், கடலில் சுமார் 30 கடல்மைல் தூரம் அதிகாலை பயணம் செய்து அமைதியாக இருக்கும் கடலில் கூட்டம் கூட்டமாக பறந்துவரும் கோலாமீனை பிடித்து, பிற்பகல் கரைக்கு கொண்டு வருவார்கள். பொதுவாக மீன்கள் கடல் நீரில் நீந்தும் போது மீனவர்கள் வலைவீசி பிடிப்பது வழக்கம். ஆனால் கோலா மீன்கள் கடல் நீர் மட்டத்தில் இருந்து சுமார் 5 அடி உயரத்தில் ஒரு குறிப்பிட தூரம் வரை தாவி பறக்கும்.

இவ்வாறு பறக்கும் மீன்களை அதிகாலை அமைதியை பயன்படுத்தி மீனவர்கள் லாவகமாக வலைவீசி பிடிப்பார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், நள்ளிரவு புல், பூண்டு செடிகளோடு, ஆபத்தான பயணம் செய்து, புல் பூண்டு செடிகளை கடலில் வீசி, அந்த புல், பூண்டு செடிகளில் நிழல் தேடி பறந்துவரும் மீன்களை மீனவர்கள் பிடித்தனர். தற்போது அந்தமுறை இல்லை. சாதாரணமாக கடலில் சென்று மீன்களை மீனவர்கள் பிடித்து வருகிறார்கள்.

4,000 மீன்கள்

இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் ஒரு சில மீனவர்கள் வலையில் மட்டும் சிக்கிய கோலா மீன்கள், கடந்த ஒரு வாரமாக நூற்றுக்கு மேற்பட்ட மீனவர்கள் வலையில் அதிக அளவு சிக்க தொடங்கி உள்ளது. தற்போது ஒரு பைபர் படகில் சுமார் 3,000 முதல் 4,000 மீன்கள் வரை கிடைக்கிறது. ரூ.50-க்கு 8 மீன்களும், ரூ.100-க்கு 16 மீன்களும் ஐஸ் போடாமல் விற்கப்படுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள். காரைக்காலில் இருந்து கோலா மீன்கள் வெளியூருக்கு ஐஸ் போட்டு அனுப்பி வைக்கப்படுகிறது..

கருவாடு

மாலை நேரத்தில் விற்பனைக்கு வரும் கோலாமீன்களை பெரும்பாலும் தோலை உரித்தே மீனவர்கள் விற்பனை செய்கிறார்கள். இந்த வகை மீனை பெரும்பாலான மக்கள் இரவு நேரத்தில் தேங்காய் எண்ணெய்யில் மட்டுமே சமைத்து சாப்பிடுகிறார்கள். விற்பனையாகாத மீன்களை கருவாடாக்கிவிடுகிறார்கள். கோலா மீன் சீசன் முடிந்ததும் கோலாமீன் கருவாடு அதிக அளவு விற்பனை செய்யப்படும்.

Next Story