ஈரோடு ராஜாஜிபுரத்தில் 6 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதாரக்கேடு


ஈரோடு ராஜாஜிபுரத்தில் 6 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதாரக்கேடு
x
தினத்தந்தி 13 May 2019 3:15 AM IST (Updated: 13 May 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு ராஜாஜிபுரத்தில் 6 ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படவில்லை. மேலும், அங்கு குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் ஜானகிஅம்மாள் லே–அவுட் பகுதியில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பார்க்ரோடு, புதுமஜித் வீதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ராஜாஜிபுரம் செல்ல வேண்டுமென்றால் ஜானகி அம்மாள் லே–அவுட் வழியாக செல்ல வேண்டும். இதனால் அந்த வழியாக தினமும் ஏராளமான இருசக்கர வாகனங்கள், கார்கள், லாரிகள் சென்று வருகின்றன.

ஆனால் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக மழைக்காலத்தில் அந்த பகுதி சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

அங்கு குடியிருப்பு பகுதிக்கு சற்று ஒதுக்குபுறமாக குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அங்கு சென்று பொதுமக்கள் குப்பைகளை கொட்டாமல், தனியார் காலிஇடத்தில் கொட்டி வருகிறார்கள். மேலும், குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:–

கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலை பள்ளிக்கூடம் அருகிலேயே ஜானகிஅம்மாள் லே–அவுட் பகுதி உள்ளது. எங்கள் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக புதிய சாலை அமைக்கப்படவில்லை. அருகில் உள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு புதிய தார் சாலை அமைக்கப்பட்டுவிட்டது. ஆனால் எங்கள் பகுதி மட்டும் புறக்கணிக்கப்படுகிறது.

மேலும், ராஜாஜிபுரம் 3–வது தெரு சந்திப்பில் சாக்கடை கால்வாய் முறையாக கட்டப்படவில்லை. அங்கு பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். சாக்கடை கால்வாயில் குப்பைகள் சென்று அடைந்துவிடுவதால் மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல முடியாமல் மழைநீர் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. இது பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும், குப்பைகளையும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் தினமும் அள்ளுவதில்லை. இதனால் அங்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. இது நோய் பரவுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

எனவே எங்கள் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கவும், சாக்கடை கால்வாய் கட்டவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story