ஈரோட்டில் சுட்டெரிக்கும் வெயில்: பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததால் வீதிகள் வெறிச்சோடின
ஈரோட்டில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததால் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஈரோடு,
அக்னி நட்சத்திரத்தின் தொடக்கத்திலேயே ஈரோட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. அதிகபட்சமாக 106 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெயில் 100 டிகிரியை விட அதிகமாக சுட்டெரித்தது.
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர தயங்கினர். அவசர வேலை இருந்தால் மட்டுமே வீடுகளில் இருந்து வெளியே சென்றார்கள். இதனால் வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
பொதுவாக கோடை விடுமுறையின்போது கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். ஆனால் நேற்று காலையில் இருந்தே வெயிலின் கொடுமை அதிகமாக காணப்பட்டது. இதனால் பகலில் பொருட்கள் வாங்க யாரும் முன்வராததால் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாலை நேரத்தில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
இருசக்கர வாகனங்களில் சென்றபோது முகத்தில் அனல் காற்று பயங்கரமாக வீசியது. சிறிது தூரம் வெயிலில் நடந்து சென்றாலே பொதுமக்களுக்கு தாகம் அதிகமாக எடுத்தது. இதனால் இளநீர், பதனீர், கரும்பு சாறு, குளிர்பானங்கள், ஜூஸ் வகைகள் போன்றவற்றை அவர்கள் விரும்பி சாப்பிட்டனர். இந்த பொருட்களின் விற்பனையும் சூடுபிடித்து வருவதால் சாலையோரங்களில் புதிதாக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.