கஜா புயலால் பாதித்த விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனத்தில் பயிர் சாகுபடி செய்ய 100 சதவீத மானியம் அதிகாரி தகவல்


கஜா புயலால் பாதித்த விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனத்தில் பயிர் சாகுபடி செய்ய 100 சதவீத மானியம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 13 May 2019 4:15 AM IST (Updated: 13 May 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

பழனி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, சொட்டுநீர் பாசனம் மூலம் பயிர்சாகுபடி செய்ய 100 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

பழனி,

கடந்த ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்திலும் கோரத்தாண்டவம் ஆடியது. பழனி பகுதியில் புயலால் பெரும்பாலான விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன. இதையடுத்து விவசாயிகளுக்கு அரசு சார்பில் நிவாரண தொகை வழங்கப்பட்டது. தற்போது அந்த இடங்களில் விவசாயிகள் மீண்டும் பயிர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு அல்லது சாகுபடி செய்யவுள்ள பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க அரசு 100 சதவீத மானியம் வழங்க உள்ளதாக பழனி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மீனாகுமாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:–

தற்போதுள்ள தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க சொட்டுநீர் பாசனம், தெளிப்புநீர் பாசனம் உள்ளிட்ட முறைகளில் பயிர் சாகுபடி செய்ய வேளாண் அதிகாரிகள் விவசாயிகளை அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் மேற்கண்ட முறையில் பயிர்சாகுபடி செய்ய அரசு மானியமும் வழங்கி வருகிறது. பழனி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகள், சாகுபடி உத்திகளை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கஜா புயலால் பாதித்த இடங்களில் செய்துள்ள அல்லது செய்யவுள்ள பயிர்சாகுபடிக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க அரசு 100 சதவீதம் மானியம் வழங்கவுள்ளது. இதற்கு விவசாயிகள் தங்கள் விளைநிலத்தின் சிட்டா, அடங்கல், நில வரைபடம், நீராதாரத்துக்கான ஆவணம், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குத்தகைதாரராக இருப்பின் பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம் உள்ளிட்டவற்றுடன் அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story