பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் உள்ளனர் மந்திரி ஜமீர் அகமதுகான் பரபரப்பு பேட்டி
கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது என்றும், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் மந்திரி ஜமீர் அகமதுகான் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது என்றும், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் மந்திரி ஜமீர் அகமதுகான் தெரிவித்துள்ளார்.
20 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் கூட்டணி ஆட்சி கவிழும் என்றும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் பா.ஜனதாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் எடியூரப்பா கூறியுள்ளார்.
இதுகுறித்து உப்பள்ளியில் நேற்று மந்திரி ஜமீர் அகமதுகானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
10 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில்...
மாநிலத்தில் கூட்டணி அரசு அமைந்ததில் இருந்தே ஆட்சி கவிழ்ந்து விடும் என்று எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் கூட்டணி ஆட்சி எந்த பிரச்சினையும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. தற்போது மீண்டும் கூட்டணி ஆட்சி கவிழும் என்று எடியூரப்பா கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் பா.ஜனதாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா கட்சியின் தலைவர்களுடன் தொடா்பில் இருப்பது போன்று, பா.ஜனதா கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். அதனால் கூட்டணி ஆட்சியை பா.ஜனதாவினரால் கவிழ்க்க முடியாது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20 பேரின் பெயரை பா.ஜனதாவினர் பகிரங்கப்படுத்தினால், நாங்களும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10 பேரின் பெயரை வெளியிடுவோம்.
அரசியலில் இருந்து விலக தயார்
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23-ந் தேதி கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று எடியூரப்பா கூறி வருகிறார். 23-ந் தேதிக்கு பதிலாக கூடுதலாக 2 நாட்கள் அளிக்கிறேன். வருகிற 25-ந் தேதி கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா ஆட்சியை பிடித்தால் அரசியலில் இருந்து விலகுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
அதுபோல, 25-ந் தேதிக்குள் கூட்டணி ஆட்சி கவிழவில்லை என்றால், அரசியலில் இருந்து விலக எடியூரப்பா தயாரா?. கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சியால் எக்காரணத்தை கொண்டும் ஆட்சிக்கு வர முடியாது. முதல்-மந்திரி குமாரசாமி செய்த தவறு காரணமாக 2008-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. இனிமேல் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது.
சித்தராமையா முதல்-மந்திரி ஆவார்
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி பாதுகாப்பாக இருக்கிறது. 5 ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும். கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக குமார சாமியே இருப்பார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தலைவர் சித்தராமையா. அவர் மீண்டும் முதல்-மந்திரி ஆவார்.
2022-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். அப்போது சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆவார். இதே கருத்தை தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூறி வருகின்றனர். இதில் தவறு எதுவும் இல்லை.
இவ்வாறு மந்திரி ஜமீர் அகமதுகான் கூறினார்.
Related Tags :
Next Story