கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 May 2019 4:30 AM IST (Updated: 13 May 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பல்லடம்,

பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா மற்றும் போலீசார் அறிவொளிநகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி, அவருடைய மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.

அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பல்லடம் அறிவொளிநகரை சேர்ந்த சாகுல்ஹமீது என்பவருடைய மகன் அப்துல் ரகுமான் (வயது 23) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த வாலிபரிடம் நடத்திய தொடர் விசாரணையில் அவருக்கும் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்தவரும் தற்போது சின்னக்கரை பகுதியில் வசித்து வரும் பனியன் நிறுவன தொழிலாளியான மூர்த்தி (24) என்பவருக்கும், ஈரோடு திண்டல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவருக்கும் கஞ்சா கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்படி மொத்தம் 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story