தேவிபட்டினம் நவபாஷானத்தில் நிலவும் சீர்கேடுகள் உடனடியாக சரிசெய்ய பக்தர்கள் வலியுறுத்தல்


தேவிபட்டினம் நவபாஷானத்தில் நிலவும் சீர்கேடுகள் உடனடியாக சரிசெய்ய பக்தர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 May 2019 3:29 AM IST (Updated: 13 May 2019 3:29 AM IST)
t-max-icont-min-icon

தேவிபட்டினம் நவபாஷானத்தில் சீர்கேடுகள் அதிகரித்து வருவதால் உடனடியாக அவற்றை சரி செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் முக்கியமானது தேவிபட்டினம் நவபாஷானம் கடற்கரை. இங்கு கடலுக்குள் நவக்கிரகங்கள் அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். மேலும் இந்த நவக்கிரகத்தை ராமபிரான் வழிபட்டதாகவும் நம்பப்படுகிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து நவக்கிரக வழிபாடு மற்றும் தோ‌ஷ பரிகாரங்கள் செய்து செல்கின்றனர். தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் தேவிபட்டினம் நவபாஷான கோவிலுக்கும் தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். கடலுக்குள் அமைந்துள்ள இந்த நவக்கிரகங்களை பக்தர்கள் சிரமமின்றி வழிபடும் வகையில் சுமார் 20 மீட்டர் நீளத்துக்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நடைபாதையில் தடுப்பு சுவர்கள், அலங்கார கற்கள் அமைக்கப்பட்டிருந்தன. நாளடைவில் தடுப்புசுவர்கள் சேதமடைந்தும், கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. இதையடுத்து அந்த நடைபாதையில் நடந்து செல்ல பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர். மேலும் கடலில் புனித நீராட செல்லும் பகுதியில் படித்துறை அமைக்கப்படாமல் மணல் மூடைகளை போட்டு வைத்திருந்தனர். இதனால் நீராடிவிட்டு ஈர ஆடையுடன் வரும் பக்தர்கள் மணல் மூடையில் வழுக்கி கடலுக்குள் விழும் நிலையும் இருந்து வருகிறது. இதுதவிர அருகில் உள்ள கழிப்பறைகளில் இருந்தும் கழிவுகள் கடலில் கலக்கின்றன.

இதனால் பக்தர்கள் நீராடுவதற்கே தயங்குகின்றனர். இதேபோல நவபாஷான பகுதிகளில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை அப்படியே போட்டுச்செல்வதால் எங்கு பார்த்தாலும் மதுபாட்டில்களாக காணப்படுகின்றன. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறையினரிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து இந்த அவலம் நீடித்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தேவிபட்டினம் நவபாஷான கடற்கரை பகுதியில் உடனடியாக சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story