3 ஏரிகள் இருந்தும் பயனில்லை குடிநீருக்காக பல மைல் தூரம் அலையும் அவலம் எப்போது தீரும் சகாப்பூர் மக்களின் தாகம்?
மும்பையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில், தானே மாவட்டத்தில் சகாப்பூர் தாலுகா பகுதி உள்ளது. இங்கு தான் வைத்தர்ணா, தான்சா, பட்சா ஆகிய மிகப்பெரும் ஏரிகள் உள்ளன.
மும்பையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில், தானே மாவட்டத்தில் சகாப்பூர் தாலுகா பகுதி உள்ளது. இங்கு தான் வைத்தர்ணா, தான்சா, பட்சா ஆகிய மிகப்பெரும் ஏரிகள் உள்ளன.
பரிதவிப்பு
இந்த ஏரிகளில் இருந்து தான் சுமார் 1½ கோடி மக்கள் வசிக்கும் மும்பைக்கு குறைவில்லாமல் குடிநீர் கிடைக்கிறது. இதில் வைத்தர்னா, தான்சா ஏரியில் இருந்து 455 மில்லியன் லிட்டரும், பட்சா ஏரியில் இருந்து 2 ஆயிரத்து 50 மில்லியன் லிட்டர் தண்ணீரும் தினமும் மும்பைக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
எனினும் ஏரிகளை சுற்றி உள்ள 162 கிராமங்களில் வசிக்கும் மக்கள், குடிக்க ஒரு குடம் சுத்தமான தண்ணீர் கூட கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
செத்து மடியும் ஆடு, மாடுகள்
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கினாலே சகாப்பூர் தாலுகா கிராம மக்களின் பாடு திண்டாட்டம் தான். கிணறுகளில் நீர் வற்றிவிடும். நிலத்தடி நீரை தவிர இவர்களுக்கு நீர் ஆதாரங்கள் என எதுவும் இல்லை. எனவே இந்த மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து கிணற்றில் சொட்டு, சொட்டாக ஊறும் தண்ணீரை எடுத்துச்செல்கின்றனர்.
கிணறுகளில் தண்ணீர் இல்லாத கிராம மக்கள் பல மைல் தூரம் நடந்து சென்று அருகில் உள்ள கிராம கிணறுகளில் தண்ணீர் எடுத்து வருகின்றனர். ஒரு சில கிராமங்களுக்கு மட்டும் டேங்கர் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அந்த டேங்கர் தண்ணீர் மக்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை.
மனிதர்களுக்கே இந்த நிலை என்றால் கால்நடைகளின் நிலை இன்னும் பரிதாபம். இந்த பகுதியில் ஆண்டு தோறும் கோடை நேரத்தில் வெயிலின் தாக்கம் மற்றும் தண்ணீர் பஞ்சத்தால் 100-க்கும் அதிகமான ஆடு, மாடுகள் செத்து மடிகின்றன.
ஏரி நீர் வேண்டும்
இது குறித்து தாப்பூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கூறும்போது:-
40 அடி ஆழமுள்ள கிணற்றில் ஊறும் தண்ணீரை நீண்ட கயிறைப்போட்டு எடுக்கிறோம். ஒரு குடம் தண்ணீர் நிரப்பவே ஒரு மணிநேரம் ஆகிவிடும். காலை 7 மணிக்கு வந்தால் 4 குடத்தை நிரப்பி செல்ல மதியம் 12 மணி ஆகிவிடுகிறது. தண்ணீர் நிரப்ப கிணற்றடியில் காத்திருந்தே பாதி ஆயுள் போய்விடுகிறது.
மும்பைக்கு 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை செய்கிறார்கள். அப்போது எங்களுக்கு மட்டும் ஏன் தண்ணீர் தர மறுக்கிறார்கள்?. அரசு ஏன் பாரபட்சம் காட்டுகிறது? மும்பைக்கு ஒருநாள் வினியோகம் செய்யும் தண்ணீரை வைத்து எங்களின் ஒரு ஆண்டு குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்வோம்.
வைத்தர்னா, தான்சா, பட்சா ஏரிகளில் இருந்து எங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். கடந்த ஆண்டு சகாப்பூர் பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த 1000 பேர் இங்கிருந்து நடந்தே மும்பை சென்று மந்திராலயாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தோம். ஆனால் தற்போது வரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே தாப்பூர், சாவர்காட், சுசுர்வாடி உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்தோம். எனவே விரைவில் எங்களுக்கு ஏரிகளில் இருந்து தண்ணீர் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வேதனையுடன் கூறினார்.
அடிப்படை வசதி
தண்ணீர் பிரச்சினை மட்டுமின்றி அடிப்படை வசதிகள் கூட இல்லாமலும் சகாப்பூர் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த பகுதியில் எங்கும் மண் சாலைகள் தான் உள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகள் தண்ணீர் வசதி இல்லாமல் பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன. உடல்நலம் பாதிக்கப்பட்டால் தானே அல்லது மும்பைக்கு தான் வரவேண்டும்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பாலாபாய் என்பவர் கூறுகையில், ‘‘சகாப்பூர் பகுதியில் ஆஸ்பத்திரி எதுவும் கிடையாது. சாலை வசதி கூட கிடையாது. எங்கள் பகுதியில் உரிய நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்காமல் பாம்பு கடித்து பலர் உயிரிழக்கின்றனர்.
எனவே எங்கள் பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க அரசு முன்வரவேண்டும். மும்பையில் இருக்கும் பெரிய பெரிய அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் எங்களையும் மனிதர்களாக பார்க்க வேண்டும்’’ என உருக்கமாக கூறினார்.
Related Tags :
Next Story