தலைமை ஏற்போம் வாருங்கள் : உதாரணங்களாக வாழ்வோம் (பகுதி-8)


தலைமை ஏற்போம் வாருங்கள் : உதாரணங்களாக வாழ்வோம் (பகுதி-8)
x
தினத்தந்தி 13 May 2019 12:40 PM IST (Updated: 13 May 2019 12:59 PM IST)
t-max-icont-min-icon

அகிம்சை வழியில் செயல்படும் போது ஒரு மனிதன் உயர்ந்த மனிதனாக மாறுகிறான். அவனது தற்பெருமை குறைகிறது. ஆழ்ந்த அறிவை ஒரு அகிம்சாவாதியால் தான் உருவாக்க முடியும்.

தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு சிறந்த உதாரணமாக தலைவர்கள் வாழ வேண்டும். ஒரு பாடமாகவும் திகழ வேண்டும். அப்போதுதான், அந்தத் தலைவர்களின் சிறந்த பண்புகளையும், செயல்பாடுகளையும் தொண்டர்கள் பின்பற்றத் தொடங்குவார்கள்.

ஒரு நல்ல தலைவரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். சிறந்த தலைவர்களாகவும் உருவாகிறார்கள்.

“ஒரு தலைவர் எப்படி உருவாகிறார்?” என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் போதுதான் “எல்லோராலும் தலைவராக முடியும்” என்ற நம்பிக்கை நம்முள் எழுகிறது.

“ஒரு ஹீரோ போல இந்த உலகத்தில் இருப்பவர் எனது அப்பாதான்” என்று சின்னஞ்சிறு வயதில் தனது தந்தையை ஒரு குழந்தை சித்தரித்து மகிழ்கிறது. இதனால்தான், அந்தக் குழந்தை தனது தந்தையை தலைவனாக ஏற்றுக்கொள்கிறது.

இந்தக்குழந்தை வளரும் போது அதன் சிந்தனை சற்று வேறுபடுகிறது.

“யாரிடம் அதிகாரம் இருக்கிறது? யார் சொன்னால் மற்றவர்கள் கீழ்படிந்து நடக்கிறார்கள்?” என்று உற்று நோக்குகிறது. இப்போது குழந்தையின் கண்களில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் தென்படுகிறார்கள். இதன்விளைவு, “போலீஸ்காரராக மாறுவதுதான் எனது வாழ்க்கையின் குறிக்கோள்” என சின்னஞ்சிறு மனது எண்ணுகிறது.

சிறுவன் இப்போது பள்ளிக்குச் செல்கிறான். பள்ளி மாணவர்களில் சிலர், ஆசிரியருக்குப் பயந்து நடுங்குவதைப் பார்க்கிறான். “அந்த அதிகாரம் என் கையில் வரவேண்டும் என்றால், நான் பள்ளி ஆசிரியராக மாற வேண்டும்” என்று முடிவெடுக்கிறான்.

இப்படி - சிறுவன் வளரும் நேரங்களில், கால சூழலுக்கு ஏற்ப அவனது இளம்மனதில் அவனுக்குப் பிடித்த தலைவர்கள் மாறுகிறார்கள்.

டி.வி.பார்ப்பது, சினிமாவுக்குச் செல்வது போன்றவைகளெல்லாம் இப்போது அந்த சிறுவனின் வழக்கமாகிவிட்டது. இதனால், சிறுவனின் மனதிலும் அவன் விரும்பும் தலைவர்கள் மாறுகிறார்கள்.

“மூன்று மணி நேரத்திற்குள் சாதாரண நிலையிலுள்ள ஒரு மனிதன் பெரும் பணக்காரனாக மாறுவதாக சில சினிமாக்களில் காட்டுகிறார்கள். எந்தத்துறையைத் தேர்ந்தெடுத்தால், இப்படி மூன்று மணி நேரத்திற்குள் பணக்காரத் தலைவனாகலாம்” என சிந்திக்கிறான் அந்தப் பள்ளி மாணவன்.

ஒருவர் தனது நடை, உடை, பாவனைகளை மட்டும் மாற்றிவிட்டு தலைவராகிவிடலாம் என எண்ணினால், அந்த எண்ணம் பெரும்பாலும் நிறைவேறாது. அப்படி நிறைவேறினாலும், நிறைவேறிய அந்த எண்ணம் அற்ப நாளில் அழிந்துபோகும்.

ஒரு தலைவருக்குரிய நெறிமுறைகளின்படி வாழ்பவர்களால் மட்டும்தான் நீண்டகால தலைவர்களாக மக்கள் மனதில் இடம்பெற இயலும்.

இந்தியாவில் பல்வேறு தலைவர்கள் தோன்றி புகழ்பெற்றாலும் “இந்தியாவின் தந்தை” என்று மகாத்மா காந்தியடிகளை போற்றிப் புகழுவதற்குக் காரணம், தான் எதை மக்களுக்குச் சொன்னாரோ அந்த சொல்லின்படியே வாழ்ந்து காட்டிய பெருமை அவருக்கு உண்டு.

பாரிஸ்டர் பட்டம் பெற்றிருந்தாலும், “செய்யும் தொழிலே தெய்வம்” என கருதி செயல்பட்டார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது, காந்திக்கு முடிவெட்ட வெள்ளைக்காரர் ஒருவர் மறுத்துவிட்டார். எனவே, தனது முடியை தானே வெட்டிக்கொண்டார். இதனால், மற்றவர்களெல்லாம் கேலியும், கிண்டலும் செய்தார்கள். எதற்கும் கவலைப்படாத காந்தி, தனது வாழ்க்கையை மேலும் எளிதாக்கிக்கொண்டார்.

அகிம்சை வழியில் தனது போராட்டத்தை அமைத்துக்கொண்டார். தீண்டாமையை ஒழிக்க சபதம் பூண்டார். கலப்பு திருமணத்திற்கு ஆதரவு கொடுத்தார்.

“மனதில் தீய எண்ணத்தை உருவாக்குவது, பொறுமையிழந்து ஆத்திரம் கொள்வது, பொய்பேசுவது, மற்றவர்களைப்பற்றி புறம்பேசுவது, அடுத்தவர்களுக்குத் தீங்கு நினைப்பது போன்றவைக எல்லாம் அகிம்சைக்கு எதிரானது” என்பது காந்தியடிகளின் அசைக்க முடியாத கருத்தாக அமைந்தது.

“சத்தியத்தை கடைப்பிடித்து, அரசியலில் வெற்றி பெறலாம்” என்பதை தனது சத்தியாகிரகப் போராட்டம் மூலம் நிரூபித்தார் காந்தி. இந்து-முஸ்லீம்களின் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, கள் உண்ணாமை போன்றவைகளெல்லாம் காந்தியடிகளின் சத்தியத்தை உணர்வதற்குரிய திட்டங்களாக அமைந்தது.

“நடைமுறைப் பிரச்சினைகளை கருத்தில் கொள்ளாமல், அதற்கு ஒரு தீர்வும் சொல்லாமல் இருக்கும் எந்தவொரு மதத்தையும், ‘மதம்’ என என்னால் கருத முடியாது” என தெளிவாக மக்களிடம் விளக்கி தனது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். தியானம், உணவு கட்டுப்பாடு, கூட்டு வழிபாடு, உண்ணா நோன்பு, தன்னலம் மறுப்பு என்ற தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அதிக ஆர்வத்தைக் காட்டினார்.

“உள்ளங்களைத் தூய்மைப்படுத்துவதன் மூலம் மன தைரியத்தைப் பெற்றுக்கொள்ளலாம்” என்பது காந்தியடிகளின் சிந்தனையாகும். ‘ஒத்துழையாமை இயக்கம்’ நடத்தி, இந்திய விடுதலைக்காக பாடுபட்டவர் மகாத்மா காந்தியடிகள்.

தீண்டாமை என்னும் பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை ஒதுக்கி வைக்கும் செயலை கடுமையாக எதிர்த்தார் காந்தியடிகள். “தீண்டாமை ஒரு பாவம்” எனவும் அறிவித்தார். “நாடு விடுதலை பெறும்போது, நாட்டு மக்கள் சமுதாயத்தில் சமநிலை பெற வேண்டும்” என்பது காந்தியடிகளின் திட்டமாகும்.

“அகிம்சை வழியில் செயல்படும்போது ஒரு மனிதன் உயர்ந்த மனிதனாக மாறுகிறான். அவனது தற்பெருமை குறைகிறது. ஆழ்ந்த அறிவை ஒரு அகிம்சாவாதியால்தான் உருவாக்க முடியும். பயம், கோபம், வெறுப்பு போன்றவைகளை நீக்க அகிம்சை உணர்வு அடிப்படைத் தேவையாக அமைகிறது” என்பது காந்தியடிகளின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

அவர் தமிழகத்தில் மதுரைக்கு வந்தபோது, தமிழக மக்களில் பலர், மேல்சட்டையின்றி இருப்பதைப்பார்த்து, “இனிமேல் நானும் இவர்களைப்போல மேல்சட்டை அணிவதில்லை” என்று உறுதிமொழி எடுத்து, அதை தனது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வெற்றி கண்டார். மகாத்மா காந்தியின் எளிய வாழ்க்கை அனைவரையும் சிந்திக்க வைத்தது.

மகாத்மா காந்தியைப்போலவே, இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்கள். உத்தமசீலர்களாக வாழ்ந்தார்கள். கறைபடியாத கரத்திற்கு சொந்தக்காரர்களாகவே விளங்கினார்கள்.

வாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டும் இத்தகைய தலைவர்களை எல்லாம் உதாரணங்களாக எடுத்துக்கொண்டால், இனிவரும் காலங்களில் இனிய தலைவர்கள் தோன்றுவது எளிதாகும்.

காலந்தவறாமைக்கு உதாரணம்

ஒருமுறை காந்தி தங்கியிருந்த ஆசிரமத்திற்கு பேராசிரியர் ஒருவர் வந்தார். அவர் காந்தியை இதற்குமுன்பு சந்தித்தது இல்லை. காந்தியை முதன்முதலாக சந்திக்க வருவதால், ஆர்வ மிகுதியால் சற்று முன்கூட்டியே காந்தி தங்கியிருந்த அறைக்கு வந்துவிட்டார். அப்போது, அந்த அறையை பெருக்கி, ஒரு பெரியவர் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.

“மகாத்மாகாந்தியை பார்க்க நான் வந்திருக்கிறேன், அவர் எங்கே?” என்று பேராசிரியர் அந்தப் பெரியவரிடம் கேட்டார்.

“நீங்கள் 11 மணிக்குத்தான் காந்தியை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருந்தீர்கள். ஆனால், இப்போது முன்கூட்டியே வந்திருக்கிறீர்கள். எனவே, நீங்கள் கொஞ்சம் காத்திருங்கள். சரியாக 11 மணிக்கு அவர் உங்களை சந்திப்பார்” என்றார் அறையை சுத்தம் செய்த பெரியவர்.

பேராசிரியர் எரிச்சலடைந்தார். “மிகப்பெரிய மனிதர் என்று காந்தியை நினைத்தேன். ஆனால், நேரம் ஒதுக்கியபின்பும் அவர் என்னை சந்திக்க தயார் நிலையில் இல்லையே?” என்று கோபப்பட்டார்.

“நீங்கள் அவசரப்படாதீர்கள். சரியாக 11 மணிக்கு அவர் உங்களை சந்திப்பார்” என்று சொல்லிக்கொண்டே அறையை சுத்தம் செய்த பெரியவர் அடுத்த அறைக்குச் சென்றுவிட்டார்.

சரியாக 11 மணிக்கு மீண்டும் திரும்பி வந்தார் அந்தப் பெரியவர். “நீங்கள் காந்தியை எதற்காக சந்திக்க வேண்டும்? உங்களுக்கு எது வேண்டுமோ? அதை என்னிடம் சொல்லுங்கள். ஏனென்றால், நான்தான் அந்த காந்தி” என்றார்.

பேராசிரியர் அதிர்ந்து, திகைத்து நின்றார். “நான் உங்களை சந்திக்க 11 மணிக்குத்தான் நேரம் ஒதுக்கியிருந்தேன். அதற்குமுன்பு நாம் சந்தித்தால், உங்களுக்கும் நேரம் வீணாகும். எனக்கும் நேரம் வீணாகிவிடும் அல்லவா?” - என்று சொல்லி சிரித்தார் காந்தி.

காலந்தவறாமைக்கு உதாரணமாகத் திகழ்ந்தார் மகாத்மா காந்தி.

- நெல்லை கவிநேசன்


Next Story