குடியாத்தம் அருகே சட்டவிரோதமாக மணல் எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
குடியாத்தம் அருகே ஆற்றில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்,
குடியாத்தம் அருகே அக்ராவரம் கவுண்டன்ய ஆற்றில் தனிநபர்கள் சிலர் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மணல் எடுப்பவர்களிடம் கேட்டபோது அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மணல் எடுத்தது தொடர்பாக கிராமமக்கள் சிலர் கேட்டுள்ளனர். அவர்களை மணல் எடுப்பவர்கள் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் மணல் எடுக்கப்பட்ட பள்ளங்களில் இறங்கி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மணல் எடுக்க கூடாது எனவும், மணல் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
ஆற்றில் இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் எடுத்து வருகின்றனர். சட்ட விரோதமாக மணல் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. மணல் எடுப்பதால் ராட்சத பள்ளங்கள் உருவாகி உள்ளது. மழை காலங்களில் இதில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஆற்றில் இறங்கும்போது அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது. இந்த மணல் எடுப்பது குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் சிறிதுநேரம் கழித்து ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story