திருப்பத்தூர் அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


திருப்பத்தூர் அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 May 2019 4:00 AM IST (Updated: 13 May 2019 10:10 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூரை அடுத்த குரிசிலாப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட வடுகமுத்தம்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

10 நாட்களுக்கு ஒருமுறை பொதுவான இடத்தில் ஒரு வீட்டிற்கு 2 குடம் குடிநீர் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த குடிநீர் போதுமானதாக இல்லை என்றும், அனைவருக்கும் போதுமான அளவு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் திருப்பத்தூர் - ஆலங்காயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாசில்தார் முருகன், திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story