செய்யாறு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
செய்யாறு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்யாறு,
செய்யாறு தாலுகா தண்டரை கிராமத்தில் கடந்த சில வாரங்களாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். குடிநீர் சீராக வினியோகம் செய்ய வேண்டும் என்று செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த மாதம் 24-ந் தேதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.
தற்போது மீண்டும் தண்டரை கிராமத்தின் மற்றொரு பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி செய்யாறில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எதிரில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு தாசில்தார் ஆர்.மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி கூறுகையில் இப்பகுதியில் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள கிணற்றை ஆழப்படுத்தி துரித நடவடிக்கை மேற்கொண்டு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story