குழந்தைகள் விற்பனை விவகாரம்: சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
சேலம்,
சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் ராணி. இவரது முதல் கணவர் இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். பின்னர் ராணி, பாலு என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர் மூலம் ராணிக்கு கடந்த ஆண்டு மே மாதம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. இதனால் 4 பெண் குழந்தைகளை வளர்ப்பது கடினம் என்பதால், ராணி தனக்கு நான்காவதாக பிறந்த பெண் குழந்தையை யாரிடமாவது விற்க முடிவு செய்தார்.
இது குறித்து அவர் சேலம் அரசு தலைமை மருத்துவ மனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த ஜெயாவிடம் தெரிவித்தார். அப்போது, அவர் குழந்தையை விற்று தருவதாக கூறியுள்ளார். பின்னர் ராணி தனது பெண் குழந்தையை ராமேசுவரத்தை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், ராணிக்கு தனது பெண் குழந்தையை பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. இதனால் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து துப்புரவு பணியாளர் ஜெயாவிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். அப்போது, குழந்தைக்காக வாங்கிய பணத்தை திருப்பி தந்து விடுகிறேன். எனக்கு என் குழந்தை வேண்டும் என அவரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜெயா, ‘தனக்கு குழந்தையை வாங்கி சென்றது யார்? என்று தெரியாது’ என கூறினார். இதனால் கோபம் அடைந்த ராணி, அரசு ஆஸ்பத்திரியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஜெயா மீது புகார் செய்தார். இதுபற்றி தகவல் அறிந்த குழந்தையை வாங்கி சென்றவர்கள் உடனே குழந்தையை கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து சென்றனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. இதனிடையே, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய ஜெயாவை பணியில் இருந்து தனியார் நிறுவனம் நிறுத்திவிட்டது.
தற்போது நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய ஜெயா குறித்தும், அவர், மேச்சேரியை சேர்ந்த ராணியிடம் குழந்தையை வாங்கி விற்றுக் கொடுத்த விவரமும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து குழந்தையை விற்க உதவிய ஜெயாவிடமும், குழந்தையை விற்ற மேச்சேரி ராணியிடமும் விசாரணை செய்ய சேலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்திருந்தனர். முன்னதாக அவர்கள் நேற்று முன்தினம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினர். இதுதவிர, முன்னாள் துப்புரவு ஊழியர் ஜெயா மற்றும் குழந்தையின் தாய் ராணி ஆகியோரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த சுரேஷ்-மேனகா தம்பதி பிறந்து 40 நாட்கள் ஆன ஆண் குழந்தையை மஞ்சள் காமாலை பாதித்ததாக கூறி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அப்போது, அவர்கள் கொல்லிமலை பெரியசாமி கோவிலில் தனியாக கிடந்த குழந்தையை தத்து எடுத்துக்கொண்டு வந்ததாக கூறினர். இதுகுறித்து நாமக்கல் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர், அந்த குழந்தை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக கடந்த 1-ந் தேதி சேர்க்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 10-ந் தேதி அந்த குழந்தை இறந்தது. இந்த குழந்தை கோவிலில் கிடந்து எடுக்கப்பட்டதாக கூறியது உண்மையா? அல்லது கொல்லிமலை பகுதிகளில் குழந்தை விற்பனை கும்பலிடம் இருந்து வாங்கப்பட்டதா? என்பது குறித்தும் சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story