தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் புதுஏரி


தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் புதுஏரி
x
தினத்தந்தி 14 May 2019 3:30 AM IST (Updated: 13 May 2019 11:50 PM IST)
t-max-icont-min-icon

கன்னங்குறிச்சி பேரூராட்சி உள்ள புது ஏரியானது தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.



சேலம்,


தமிழகம் முழுவதும் கோடை காலம் தொடங்கியதையொட்டி பரவலாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடப்பதை காணமுடிகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும், கடும் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக குறைந்து வருவதால் குடிநீருக்கும், விவசாய பயன்பாட்டிற்கும் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

சேலம் அருகே கன்னங்குறிச்சி பேரூராட்சி உள்ளது. இங்குள்ள புது ஏரியானது சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த புது ஏரி பல ஆண்டுகளாக வறண்ட நிலையிலேயே காட்சியளிக்கிறது. அதாவது, ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பினால் கன்னங்குறிச்சி, மன்னார்பாளையம், கோவிந்தராஜபட்டணம், ஏரிக்காடு ஆகிய பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

ஆனால் தற்போது நிலவும் கடும் வறட்சியால் 70 சதவீத விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பயிர் சாகுபடி செய்வதை நிறுத்திவிட்டனர். கிணறுகளில் குறைந்த அளவில் காணப்படும் தண்ணீரை வைத்து சில விவசாயிகள் மட்டும் நெல், வெண்டைக்காய், வாழை போன்றவற்றையும், சிலர் தங்களது தோட்டத்தில் மல்லிகை, சாமந்தி போன்ற பூக்களையும் சாகுபடி செய்து வருவதை காணமுடிகிறது.

கடந்த 2016-ம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏற்காடு அடிவாரத்தில் இருந்து மழைநீர் வெளியேறி, கன்னங்குறிச்சி புது ஏரிக்கு வந்து நிரம்பியது. அப்போது ஏரி முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சியளித்ததை அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து பார்த்து ரசித்தனர். மேலும், ஏரியில் இருந்து தண்ணீர் நிரம்பி கால்வாய் வழியாக மூக்கனேரிக்கு சென்றது. இந்த ஏரியும் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியே செல்லும் வகையில் திறந்துவிடப்பட்டது.

அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக புது ஏரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. கன்னங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களின் நீர் ஆதாரமாக விளங்கி வரும் புதுஏரி நிரம்பினால் மட்டுமே இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையும், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பிரச்சினையும் தீரும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கன்னங்குறிச்சி பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது.

இதுகுறித்து கன்னங்குறிச்சியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், புது ஏரி நிரம்பினால் மட்டுமே இந்த பகுதியில் உள்ள பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் உள்ள விவசாயம் செழிக்கும். தற்போது கடும் வறட்சி நிலவுவதால் ஏரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. ஏற்காடு அடிவாரத்தில் இருந்து தண்ணீர் வரும். அந்த பகுதியில் வனத்துறை சார்பில் 3 தடுப்பணைகளும், பொதுப்பணித்துறை சார்பில் ஒரு தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணைகளை தாண்டி தான் புது ஏரிக்கு தண்ணீர் வரும்.

ஆரம்பத்தில் புது ஏரி உரிய பராமரிப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் குடிமராமத்து திட்டப்பணிகள் மூலம் ரூ.48 லட்சம் மதிப்பில் புது ஏரி மற்றும் வரத்து கால்வாய்களை புனரமைப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பருவமழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. வருணபகவான் மனது வைத்து மழை பெய்தால் மட்டுமே புது ஏரி நிரம்பும், என்றார்கள்.

Next Story