சேலத்தில் வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை குறைந்தது குண்டுமல்லி கிலோ ரூ.110-க்கு விற்பனை
சேலத்தில் வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை குறைந்து உள்ளது. குண்டுமல்லி கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சேலம்,
சேலம் கடைவீதியில் வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உற்பத்தியாகும் பூக்களை விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள். தற்போது மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது.
சேலம் அருகே உள்ள வீராணம், பனமரத்துப்பட்டி, பள்ளிப்பட்டி, வலசையூர், வாழக்கொட்டப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் குண்டுமல்லி பூ விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட குண்டுமல்லி பூ அதிகமாக கொண்டு வரப்படுகிறது. இதன் காரணமாக கடந்த வாரம் கிலோ ரூ.200 வரை விற்ற குண்டுமல்லி நேற்று ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் மற்ற பூக்களின் விலையும் குறைந்தது. அதாவது, சன்னமல்லி கிலோ ரூ.120-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், சாமந்தி கிலோ ரூ.120-க்கும், பட்டன் ரோஸ் கிலோ ரூ.115-க்கும், கோழிக்கொண்டை கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவால் பூக்களை பெண்கள் கூடுதலாக வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும் போது, ‘பூக்கள் விளைச்சல் அமோகமாக இருப்பதால் மார்க்கெட்டுக்கு அதிகளவு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதன் காரணமாகவும், சுப முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை இல்லாததாலும் பூக்களின் விலை குறைந்துள்ளது. இன்னும் சில நாட்கள் பூக்கள் விலையில் பெரிதளவு மாற்றம் இருக்காது’ என்றனர்.
Related Tags :
Next Story