கலெக்டர் அலுவலகம் எதிரே போலீசாரை கண்டித்து வக்கீல் சங்கத்தினர் நாளை ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகம் எதிரே போலீசாரை கண்டித்து வக்கீல் சங்கத்தினர் நாளை ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 May 2019 10:15 PM GMT (Updated: 13 May 2019 7:31 PM GMT)

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே போலீசாரை கண்டித்து வக்கீல் சங்கத்தினர் நாளை (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

பெரம்பலூர்,

நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக அருள் உள்ளார். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பல இளம்பெண்களை ஆளும் கட்சி பிரமுகர் உள்ளிட்ட சிலர் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, போலீசாரிடம் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்ய வக்கீல் அருள் காரணமாக இருந்தார். இந்த நிலையில் வக்கீல் அருள், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் தொடர்பாக போலி ஆடியோவை வாட்ஸ்-ஆப்பில் வெளியிட்டதாக கூறி பெரம்பலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். மேலும் அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்வுகள் நடந்த சில நாட்களிலேயே குண்டர் சட்டத்தின் கீழ் வக்கீல் அருளை கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள அருளுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, பெரம்பலூர் அட்வகேட்ஸ் அசோசியேசன் என்ற பெயரில் இயங்கும் அட்வகேட்ஸ் சங்கத்தினரின் அவசர கூட்டம் பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் முகமது இலியாஸ் தலைமை தாங்கினார்.

போலீசாரை கண்டித்து

இதில் வக்கீல் அருள் போலீசாரிடம் கொடுத்த புகார் மனுவின் மீதான அடிப்படையில், நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதிலாக புகார் கொடுத்த வக்கீலையே குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்த போலீசாரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அருள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசாரை கண்டித்தும், சிறையில் உள்ள அருளை நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நாளை (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது. 

Next Story