“அனைத்து கிராமங்களுக்கும் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை” தி.மு.க. வேட்பாளர் சண்முகையா வாக்குறுதி


“அனைத்து கிராமங்களுக்கும் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை” தி.மு.க. வேட்பாளர் சண்முகையா வாக்குறுதி
x
தினத்தந்தி 14 May 2019 3:30 AM IST (Updated: 14 May 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. வேட்பாளர் சண்முகையா கூறினார்.

ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா நேற்று காலையில் வல்லநாடு அருகே உள்ள மியாகான்பள்ளி கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அனந்தநம்பிக்குறிச்சி, மணக்கரை, அகரம் ஆகிய ஊராட்சிகளில் வீடு, வீடாக சென்று உதயசூரியனுக்கு தி.மு.க வேட்பாளர் சண்முகையா ஓட்டு சேகரித்தனர். மாலையில் உழக்குடி, கலியாவூர், காலாங்கரை, விளாத்திகுளம், கோனார்குளம், நாணல்காடு, பாறைக்காடு, வல்லநாடு ஆகிய பகுதிகிளல் வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளர் சண்முகையா பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு பயன்தரக்கூடிய எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. இந்த தொகுதியில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. ஆட்சி மாற்றம் விரைவில் வர இருக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் போது, ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் தரமான சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க வேண்டும். ஓட்டப்பிடாரத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகம் தொடங்கப்படும்.

ஓட்டப்பிடாரம் பகுதியில் கோர்ட்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டப்பிடாரம் சுற்றி உள்ள கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் ஓட்டப்பிடாரத்தில் டெப்போ அமைத்து அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி செய்து கொடுக்கப்படும். கடந்த 8 ஆண்டுகளாக குளங்களை தூர்வாருவதாக அரசு பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தின் போது, கருங்குளம் ஒன்றிய செயலாளர் மகராஜன், பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன், தெற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் தமிழ்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story