வானூர் அருகே, தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வானூர் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
வானூர் அருகே கரசானூர் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 65). இவருடைய மகள் பானுமதி (26). இவரை திண்டிவனம் அருகே தென்பசார் கிராமதை சேர்ந்த அண்ணாமலை என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கரசானூர் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவுக்காக பானுமதி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்றுமுன்தினம் இவர்கள் அனைவரும் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பானுமதி அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்தனர். உடனே திடுக்கிட்டு எழுந்த பானுமதி திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.
இந்த சத்தம் கேட்டு பானுமதியின் குடும்பத்தினர் எழுந்து மின்விளக்கை போட்டனர். அதற்குள் மர்ம நபர்கள், நகையுடன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1¼ லட்சமாகும். இதுகுறித்து பானுமதி கொடுத்த புகாரின்பேரில் வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story