ஓட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பு
ஓட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மோகன் நேற்று கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் நேற்று மாலை வி.கோவில்பத்து கிராமத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் மேலநாட்டார்குளம், கீழநாட்டார்குளம், முத்தலாங்குறிச்சி, சமத்துவபுரம், அனவரதநல்லூர், ஆழிகுடி, பக்கப்பட்டி, முறப்பநாடு, மணக்கரை, வல்லநாடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவருடன் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது:-
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 2016-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அதன்பிறகு முறைப்படி 2021-ல் தான் தேர்தல் நடக்க வேண்டும். ஆனால் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்(அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தர்ராஜ்) மாற்று அணிக்கு சென்று மீண்டும், இங்கு போட்டியிடுகிறார். என்ன தைரியத்தில் அவர் போட்டியிடுகிறார். அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று செயல்படும் தி.மு.க.வுடன் சேர்ந்து டி.டி.வி.தினகரன் அணியில் போட்டியிடுகிறார். அவர்கள் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து இருப்பதால் அ.தி.மு.க.வினர் நிம்மதியாக இருக்கின்றனர். நாங்கள் ஆளும் கட்சியாக உள்ளோம். உங்கள் கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றி தருவோம்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்கு தந்து விட்டு சென்ற திட்டங்களை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு தந்து கொண்டு இருக்கிறார். 39 லட்சம் லேப்டாப் வழங்கி உள்ளோம். ரூ.5 ஆயிரத்து 200 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு 15 லட்சத்து 50 ஆயிரம் லேப்டாப்கள் மாவட்டங்களுக்கு வந்து உள்ளன. தேர்தல் முடிந்த பிறகு அந்த லேப்டாப்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அதனை மோகன் வழங்குவார். அதற்கு மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச்செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தின் போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் புகழும்பெருமாள், கருங்குளம் ஒன்றிய செயலாளர் செங்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story