இந்துக்கள் பற்றி கமல்ஹாசன் அவதூறு பேச்சு: “மக்கள் நீதி மய்யம் கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்” அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி


இந்துக்கள் பற்றி கமல்ஹாசன் அவதூறு பேச்சு: “மக்கள் நீதி மய்யம் கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்” அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 14 May 2019 4:00 AM IST (Updated: 14 May 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

“இந்துக்கள் பற்றி அவதூறாக பேசிய கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்”என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். இது குறித்து அவர் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி,

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் பேசி இருக்கிறார். அவரது கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். அவரது நாக்கில் சனி. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஊரில் சென்று அவர் பேசி உள்ளார். தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது. அவர்களை தீவிரவாதி என்றுதான் கூற வேண்டும். சிறுபான்மையினர் ஓட்டை பெறுவதற்காக இந்துக்களை பற்றி பேசும் கமல்ஹாசன் நாக்கை ஒருகாலத்தில் அறுக்கத்தான் போகிறார்கள். ஏனென்றால் ரொம்ப பேசுகிறார்.

இந்து மதம் புனிதமான மதம். மற்ற மதங்களுக்கு முன்னோடி மதம் இந்து மதம். இந்த மதத்தை புண்படுத்துவது சில கட்சிகளுக்கு தொழிலாகி விட்டது. கி.வீரமணி, மு.க.ஸ்டாலின் இந்துக்கள் சடங்குகளை அவமானப்படுத்தி பேசுவர். பின்னர் ஓட்டுக்காக திருநீறு பூசிக் கொள்வார். மாலையை வாங்கிக் கொள்வார். அவர்கள் நடிப்பார்கள். தற்போது கமல்ஹாசன் அவர்களோடு சேர்ந்து இருக்கிறார்.

ஒற்றுமையாக வாழும் மக்களிடையே வாக்கு ஒன்றையே குறிக்கோளாக வைத்து, ஓட்டு வாங்குவதற்காகவே குறுக்குசால் ஓட்டும் வேலையை மு.க.ஸ்டாலின், கி.வீரமணி செய்தனர். தற்போது கமல்ஹாசன் ஆரம்பித்து உள்ளார். இது தவிர்க்கப்பட வேண்டிய கூட்டம். ஒடுக்கப்பட வேண்டிய கூட்டம். ஒழிக்கப்பட வேண்டிய அரசியல் வழிமுறை, நெறிமுறை. இது போன்ற பேச்சுக்களை கமல்ஹாசன் நிறுத்த வேண்டும் அல்லது நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் உரிய முறையில் தலையிட்டு அவரது கட்சியை தடை செய்ய வேண்டும். கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

நாங்கள் சாதனையை சொல்லித்தான் ஓட்டு கேட்டு வருகிறோம். தி.மு.க. ஆட்சியில் சாதனைகள் இல்லை. அவர்கள் 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார்கள். ஒரு சென்ட் இடம்கூட யாருக்கும் கொடுக்கவில்லை. ஆனால் தி.மு.க.வினர் இருக்கும் நிலத்தை வளைத்துக் கொண்டனர். தி.மு.க.வினர் தங்கள் இயலாமையை கூறி வருகின்றனர். தோல்விக்கு காரணம் கூறுவதற்காக, அ.தி.மு.க. கோடிகளை கொடுத்து ஜெயித்து விட்டதாக கூறுகிறார்கள். நாங்கள் கோடியை நம்பி அல்ல. தொண்டர்களை நம்பி, மக்களை நம்பி, ஏழைகளை நம்பி, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துகிற எண்ணம் படைத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாக்கு கேட்கிறோம். ஜெயிப்போம்.

தி.மு.க. என்று சொன்னாலே தில்லுமுல்லு கட்சிதான். ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தார். அன்றே ராகுல்காந்திக்கு நேரம் சரி இல்லை என்று சொன்னோம். ஏனென்றால் நல்லவர்கள் வாயில் இருந்து நல்ல வார்த்தை வந்தால்தான் பழிக்கும். மு.க. ஸ்டாலின் நயவஞ்சகர். பாம்பின் வாயில் இருந்து விஷம்தான் வரும். அது போன்று மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என்று கூறிவிட்டு, சந்திரசேகரராவுடன் 3-வது அணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது கூட்டணிக்கு குழிபறிக்கும் செயலாகும்.

கூட்டணியில் உள்ளவர்களை தோற்கடிப்பதுதான் தி.மு.க.வினர் வேலை. அதனை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். நம்பகத்தன்மை இல்லாத கட்சி என்பதற்கு எடுத்துக்காட்டு தி.மு.க., அண்ணா தலைமைக்கு பிறகு தி.மு.க.வை நம்பி சென்றவர்கள், தி.மு.க.வுக்கு உழைத்தவர்கள் தெருவுக்கு வந்து விட்டார்கள். இன்று உதயநிதி ஸ்டாலின் கையில் தி.மு.க.வை ஒப்படைத்து விட்டார்கள்.

கத்திரி வெயிலில் மக்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் உல்லாச படகில் சென்று கொண்டு இருக்கிறார். ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது, மன்னர் பிடில் வாசித்தாராம். அது போன்ற நிலை உள்ளது. நமக்கு மனம் இருக்கிறது. அதனால் கொடைக்கானல் போகவில்லை. அவருக்கு பணம் இருப்பதால் குளிர் பிரதேசத்துக்கு செல்கிறார்.

இதுபோன்ற குளிர்பிரதேசத்துக்கு செல்லுங்கள். தமிழ்நாட்டை விட்டு விடுங்கள். மீண்டும், மீண்டும் மக்களை ஏமாற்றாதீர்கள். மக்கள் ஏமாந்த நேரத்தில் ஆட்சிக்கு வந்த கட்சி தி.மு.க., அ.தி.மு.க. பிளவு பட்ட நேரத்தில் குறுக்குவழியில் ஆட்சிக்கு வந்த கட்சி தி.மு.க., மக்களால் தேர்வு செய்யப்பட்ட கட்சியாக தி.மு.க. ஒருபோதும் வரவில்லை. மக்கள் விரும்பி ஆட்சிக்கு வந்த கட்சி அ.தி.மு.க. தான். 28 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி செய்தது. ஆகையால் மக்கள் விரும்பும் கட்சி அ.தி.மு.க.தான்.

தி.மு.க.வுக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு கிடையாது. அந்தமானில் சென்று நிற்க வேண்டியதுதான். அடையாளம் காணப்பட்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவாகி உள்ளார். கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகிறார் என்பதை மக்கள் நம்புகிறார்கள். இதனால் தான் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வருகிறார். எங்களுக்கு வரக்கூடிய கூட்டம் மக்கள் விரும்பி வரக்கூடிய கூட்டம். இந்த கட்சிதான் ஆளும். வாழும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story