சீன கைதிகள் அடைக்கப்பட்ட ஆங்கிலேயர் கால சிறைச்சாலை


சீன கைதிகள் அடைக்கப்பட்ட ஆங்கிலேயர் கால சிறைச்சாலை
x
தினத்தந்தி 14 May 2019 3:30 AM IST (Updated: 14 May 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

நடுவட்டத்தில் சீன கைதிகளை அடைத்து வைத்த ஆங்கிலேயர் கால சிறைச்சாலை சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

ஊட்டி,

கூடலூர் அருகே நடுவட்டம் அரசு தேயிலை தோட்ட கழக(டேன்டீ) வளாகத்தில் கடந்த 1886-ம் ஆண்டு கட்டிய ஆங்கிலேயர் கால சிறைச்சாலை உள்ளது. இங்கு சீன கைதிகளை ஆங்கிலேயர்கள் அடைத்து வைத்திருந்தனர். இதில் சிறை அறைகள், தூக்கு மேடை, பிரேத பரிசோதனை மையம் உள்ளன. மேலும் சீன கைதி, ஆங்கிலேயர் சிப்பாய்களின் சிலைகள் இருக்கின்றன. இது தவிர ஆங்கிலேயர் காலத்தில் சிறையில் நடந்த சம்பவங்கள், வரலாற்று நிகழ்வுகள் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு புகைப்பட காட்சிகளாக வைக்கப்பட்டு உள்ளது.

இந்த சிறைச்சாலை பல ஆண்டுகளாக மிகவும் பாழடைந்த நிலையில் காணப்பட்டது. இதனை புதுப்பித்து சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையொட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, சிறைச்சாலை புதுப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கும் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.

நீலகிரியில் நடைபெறும் கோடை சீசன் காலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த சிறைச்சாலையை காண வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சீன கைதி, ஆங்கிலேயர் சிப்பாய்களின் உருவ சிலைகள் முன்பு நின்று தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்வதை காண முடிகிறது. மேலும் சுற்றுலா பயணிகளை சிறைச்சாலை நன்கு கவருவதை அறிய முடிகிறது. தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இந்த ஆங்கிலேயர் கால சிறைச்சாலை பராமரிக்கப்பட்டு வருகிறது.

பராமரிப்பு பணிக்காக சுற்றுலா பயணிகளிடம் குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறைச்சாலை அமைந்துள்ள பகுதியில் இயற்கை எழில் சூழலில் தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் காட்சி முனை கோபுரம் உள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்கின்றனர். கோடை சீசனில் நீலகிரிக்கு வருபவர்களுக்கு நடுவட்டத்தில் உள்ள ஆங்கிலேயர் கால சிறைச்சாலை பயனுள்ள சுற்றுலா தலமாக இருக்கும் என்றால் அது மிகையாகாது.

Next Story