கயத்தாறில், வாறுகால் அமைக்க சாலையோரத்தில் தோண்டப்பட்ட குழிகளை மூடாததால் கடும் அவதி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கயத்தாறில் வாறுகால் அமைக்க சாலையோரத்தில் தோண்டப்பட்ட குழிகளை மூடாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். உடனடியாக அந்த குழிகளை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கயத்தாறு,
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் 8 கோடி ரூபாயில் 6 கி.மீ. தூரத்துக்கு சாலை விரிவாக்க பணிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இதற்காக சாலையின் இருபுறங்களிலும் வாறுகால் அமைக்க 6 அடி ஆழத்துக்கு குழிகள் தோண்டப்பட்டன. இந்த குழிகளை மூடாமல் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டதால் கடைகளுக்கு மக்கள் 4 அடி நீளமுள்ள குழிகளை தாண்டி செல்ல முடியவில்லை. தற்போது சாலைப்பணிகளும் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலையில் சண்முகம் என்ற முதியவர் என்பவர் கயத்தாறு பஸ்நிறுத்தத்தில் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காக வந்தார். அப்போது அவர் திடீரென தடுமாறி குழிக்குள் விழுந்தார். அதில் சாக்கடை தண்ணீர் அதிகமாக இருந்ததால் அவருக்கு லேசான காயங்கள் மட்டும் ஏற் பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை தூக்கி தண்ணீர் ஊற்றி குளிக்க வைத்து அனுப்பினர்.
இந்த வாறுகால் பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இப்பகுதி வியாபாரிகள் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும் பல மாதங்களாக அதில் சாக்கடை நீர் தேங்கி வெளியேற வழியில்லாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே சாலை பணிகளை நெஞ்சாலை துறையினர் விரைவாக முடிக்க வேண்டும். சாலையோரம் தோண்டப்பட்ட குழிகளை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story