ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது - தரவரிசை பட்டியல் வெளியீடு
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. மேலும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பி.ஏ.(தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, பாதுகாப்பியல், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை), பி.காம்., பி.காம். சி.ஏ., பி.எஸ்.சி.(கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வனவிலங்கு உயிரியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்) உள்பட மொத்தம் 17 பாடப்பிரிவுகள் உள்ளன. இதில் 1,100 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 2019-20-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி முதல் வழங்கப்பட்டன.
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். கல்லூரியில் விண்ணப்பம் பெற மற்றும் சமர்ப்பிக்க கடந்த 6-ந் தேதி கடைசி நாள் ஆகும். முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக மொத்தம் 1850 பேர் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் நேற்று மாணவ-மாணவிகளின் தரவரிசை பட்டியல் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதுகுறித்த விவரங்கள் அடங்கிய நோட்டீஸ் கல்லூரியின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
மேலும் மாணவ-மாணவிகள் விண்ணப்பத்தில் அளித்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்கள் நேற்று கல்லூரிக்கு வந்து ஒட்டப்பட்ட தரவரிசை பட்டியலை பார்த்து தெரிந்துகொண்டனர். அவர்களுடன் பெற்றோர்களும் உடன் வந்திருந்தார்கள். இதையடுத்து நேற்று முதல் இடஒதுக்கீடு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. இதில் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினரும் கலந்துகொண்டனர்.
கலந்தாய்வில் மாணவ-மாணவிகள் கொண்டு வந்த சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இதனை கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி பார்வையிட்டார். இன்று (செவ்வாய்க்கிழமை) 400 முதல் 300 மதிப்பெண்கள் எடுத்தவர்கள், நாளை (புதன்கிழமை) 299 முதல் 250 மதிப்பெண்கள், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) 249 முதல் 200 மதிப்பெண்கள், வருகிற 17-ந் தேதி 199 முதல் 150 மதிப்பெண்கள், 18-ந் தேதி 149 மதிப்பெண்ணுக்கு கீழே எடுத்தவர்களுக்கும் கலந்தாய்வு நடை பெறுகிறது.
மேலும் தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு தினமும் காலை 10 மணி முதல் நடக்கிறது. கலந்தாய்வுக்கு வருகிறவர்கள் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பிளஸ்-1 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, புகைப்படங்களை எடுத்து வர வேண்டும். மாணவ-மாணவிகள் தாங்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் நாளில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story