மலர் கண்காட்சியில் இந்த ஆண்டு சிறப்பு, பூ அருவி, மலர் நாடாளுமன்றம் - வடிவமைக்கும் பணி மும்முரம்
ஊட்டி மலர் கண்காட்சியில் இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக பூ அருவி, மலர் நாடாளுமன்றம் வடிவமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சி வருகிற 17-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. மலர் கண்காட்சியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். கோடை சீசனை முன்னிட்டு பூங்காவில் நடவு செய்யப்பட்ட 5 லட்சம் மலர் செடிகளில் பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் உள்ள புதுப்பூங்காவில் மரத்தை சுற்றிலும் டேலியா மலர்கள் பூத்து குலுங்குகிறது. அப்பகுதியில் பல்வேறு வடிவங்களில் 20 ஆயிரம் பூந்தொட்டிகள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.
நடப்பாண்டில் மலர் கண்காட்சியை சிறப்பிக்கும் வகையில் இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, பிகோனியா, செம்பர் புளோரன்ஸ், ஆஸ்டர், பால்சம், ஓரியண்டல்லில்லி, கிரைசாந்திமம், வின்கா, காம்ப்ரினா, கேம்பனுலா, கைலார்டியா, கிளேடியோலஸ், கேல், சினரேரியா, கிளாக்சீனியா, புதிய ரக மற்றும் குட்டை ரக ஜெர்புரா, கேலஞ்சியோ, டெல்பீனியம், ஆன்டிரைனம், கேனா, நிமேசியா, பால்சம், ஜிப்சோபில்லா, ஜினியா, செலோசியா, ரனன்குலஸ், டியூபரஸ், பாயின் சிட்டியா உள்பட 200-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த மலர்கள் அடங்கிய 35 ஆயிரம் பூந்தொட்டிகள் மலர் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது. இது மலர் கண்காட்சியின் போது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும்.
இது தவிர இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக பல்வேறு மலர்களை கொண்டு டெல்லி நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக நாடாளுமன்ற கட்டிட வடிவில் குழி தோண்டி இரும்பு கம்பிகள் நடப்பட்டு, குறுக்காக கம்பிகள் பொருத்தப்பட்டு வருகிறது. அருவியில் இருந்து பூக்கள் கொட்டுவது போன்ற தோற்றத்தில், பூ அருவி வடிவமைக்கப்படுகிறது. மேலும் பெரணி இல்லம் பகுதியில் உள்ள புல்வெளியில் பூந்தொட்டிகள் பல வடிவங்களில் அடுக்கி காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.
தற்போது விரிவுப்படுத்தப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட மலர் மாடத்தில் வைக்கப்பட்ட பூந்தொட்டிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்கி சுற்றுலா பயணிகளை கவருகிறது. அவர்களை மகிழ்விக்க 2 கண்ணாடி மாளிகைகளில் மலர் மற்றும் அலங்கார செடிகள் அடங்கிய பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. பூங்காவில் லில்லியம் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மலர் கண்காட்சிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக மலர்களால் ‘செல்பி ஸ்பாட்’ அமைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலைத்துறையினர் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story