வாழைகள் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
வாழைகள் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கம், மே.14–
செங்கம் வட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் குப்பநத்தம் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு தலைவர் எஸ்.ராஜா தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வி.முத்தையன் முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் சர்தார், தங்கமணி, வீரபத்திரன், நாராயணசாமி உள்ளிட்டோர் கோரிக்கை குறித்து பேசினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையினால் கொட்டாவூர் கிராமம் முதல் ஊர்க்கவுண்டனூர் கிராமம் வரை உள்ள பகுதிகளில் வாழை மரங்கள் சாய்ந்தன. இது போன்று இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட சேதங்களை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே நஷ்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பரமனந்தல், குப்பநத்தம், கொட்டாவூர் ஊர்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். முடிவில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க நிர்வாகி குப்புசாமி நன்றி கூறினார்.