ஈரோட்டில் தனியார் பள்ளிக்கூட வாகனங்களை கலெக்டர் ஆய்வு


ஈரோட்டில் தனியார் பள்ளிக்கூட வாகனங்களை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 14 May 2019 4:15 AM IST (Updated: 14 May 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் தனியார் பள்ளிக்கூட வாகனங்களை கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை கோடை விடுமுறையின்போது ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி நேற்று தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ஈரோடு கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வுக்காக ஈரோடு திண்டல் அருகில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளிக்கூட வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த வாகனங்களை கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார். அப்போது அவர், வாகனங்கள் நல்ல நிலையில் உள்ளதா?, அவசர கதவு பொருத்தப்பட்டு உள்ளதா? முதல் உதவி பெட்டி வைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

ஈரோடு மற்றும் கோபி கல்வி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் நல்ல முறையில் உள்ளனவா? என்று இன்று (நேற்று) ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணியில் போலீஸ் துறை, போக்குவரத்துத்துறை, தீயணைப்பு துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உள்பட்ட 957 தனியார் பள்ளிக்கூட வானங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

வாகனங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளதா? முதல் உதவி பெட்டி வைக்கப்பட்டு உள்ளனவா? என்பது குறித்து உறுதி செய்யப்படும். மேலும் பள்ளிக்கூடங்கள் திறந்த பின்னரும் வாகனங்கள் ரோடுகளில் ஓடும்போது திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

பள்ளிக்கூடங்களுக்கு வாகனங்களில் செல்லும் மாணவ–மாணவிகள் விபத்து இல்லாமல் சென்றுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆய்வின் போது வாகனங்களில் சிறு, சிறு குறைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதை உடனடியாக சரி செய்யக்கோரி உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிக்கூட வாகனங்களை ஓட்டும் போது டிரைவர்கள் குடிபோதையில் ஓட்டக்கூடாது என்றும் புகை பிடிக்கக்கூடாது என்றும், செல்போனில் பேசக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

போக்குவரத்து விதி முறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக்கூட நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேகமாக செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்படும். மேலும் சிறப்பு அனுமதி பெற்று இயங்கும் ஆட்டோ, வேன்களும் கண்காணிக்கப்படும். பள்ளிக்கூட வாகனங்களை சிறப்பாக இயக்க டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரகுபதி, வெங்கட்ரமணி, கண்ணன் உள்பட பலர் இருந்தனர்.

இதேபோல் கோபி எஸ்.வி.வி. பள்ளிக்கூட வளாகத்தில், கோபி மற்றும் பவானி வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 75 தனியார் பள்ளிக்கூடங்களை சேர்ந்த 487 வாகனங்கள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆய்வு செய்யப்பட உள்ளது.

மேலும் சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி பள்ளிக்கூட வளாகத்தில் சத்தியமங்கலம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட 23 தனியார் பள்ளிக்கூடங்களை சேர்ந்த 94 வாகனங்களின் ஆய்வு வருகிற 23–ந் தேதி நடக்கிறது.


Next Story