சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கலெக்டர் முகாம் அலுவலகத்தில் முற்றுகை


சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கலெக்டர் முகாம் அலுவலகத்தில் முற்றுகை
x
தினத்தந்தி 14 May 2019 4:15 AM IST (Updated: 14 May 2019 3:31 AM IST)
t-max-icont-min-icon

பழங்குடியினர் என சாதி சான்றிதழ் வழங்கக்கோரி காட்டுநாயக்கர்கள் குடும்பத்துடன் ராமநாதபுரம் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம்,

காட்டுநாயக்கர் சமுதாயத்தினர் தங்களுக்கு பழங்குடியினர் என சாதி சான்றிதழ் வழங்க கோரி காலம்காலமாக போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் காட்டுநாயக்கர்கள் தங்கள் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் திரளாக வந்து ராமநாதபுரம் கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

சிறுவியாபாரிகள் சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமையில் காட்டுநாயக்கர் சமதாய தலைவர்களான அழகர், தில்லை, மாரி உள்ளிட்டவர்கள் அனைவரும் முகாம் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழங்குடியினர் என தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் வந்து கலெக்டர் வெளியூர் சென்றுள்ளதாக தெரிவித்ததும் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வந்து அமர்ந்து போராட்டத்தினை தொடர்ந்தனர்.

இதனை தொடர்ந்து ஆர்.டி.ஓ. சுமன் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் கோரிக்கை குறித்து கேட்டறிந்தார். தங்களுக்கு இதுநாள் வரை பழங்குடியினர் என சாதி சான்றிதழ் வழங்காததால் கிடைக்கும் ஒரு சில பிரிவு சாதி சான்றிதழை பெற்று சிலர் மட்டும் படித்து வருகின்றனர். பல மாணவ–மாணவிகள் சாதி சான்றிதழ் கிடைக்காததால் படிப்பை தொடர முடியாமல் நிறுத்தி விட்டனர். எங்களின் குல தொழிலை செய்யவும் வனத்துறையினர் அரசின் சட்டவிதிகளை காரணம்காட்டி தடுத்துவிடுகின்றனர். இதனால் செய்வதறியாது நாங்களும், எங்களின் குழந்தைகளும் தவித்து வருகிறோம்.

எனவே, எங்களின் நிலை உணர்ந்து பழங்குடியினர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். கோரிக்கையை கேட்டறிந்த ஆர்.டி.ஓ. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் அது முடிந்ததும் உரிய விசாரணை நடத்தி சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story