சைதாப்பேட்டையில் கஞ்சாவுடன் கல்லூரி மாணவர்கள் கைது சப்-இன்ஸ்பெக்டரின் மகனும் சிக்கினார்
சைதாப்பேட்டையில் கஞ்சா பொட்டலங்களுடன் 3 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் ஆவார்.
சென்னை,
சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர் சரவணகுமார். இவர் நேற்றுமுன்தினம் சைதாப்பேட்டை மார்க்கெட் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள சுரங்கப்பாதை அருகே சந்தேகத்திற்கிடமாக 3 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் 2 மோட்டார் சைக்கிள்களும் நிறுத்தப்பட்டிருந்தது.
அந்த இளைஞர்கள் 3 பேரிடமும் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களின் 2 மோட்டார் சைக்கிள்களையும் சப்-இன்ஸ்பெக்டர் சோதனை போட்டார். மோட்டார் சைக்கிளில் உள்ள 2 பைகளில் ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவற்றை சப்-இன்ஸ்பெக்டர் பறிமுதல் செய்தார். 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.
கல்லூரி மாணவர்கள்
கைது செய்யப்பட்டுள்ள 3 பேரும் கல்லூரி மாணவர்கள் என்று தெரியவந்தது. இவர்கள் சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பெயர் சூர்யா (வயது 19). இன்னொருவர் பெயர் சாம்நாத் (20), இவர்கள் இருவரும் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தனர். மற்றொருவர் பெயர் ரித்திக் (19). இவரும் கல்லூரி மாணவர். இவரது தந்தை சென்னை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
கல்லூரி மாணவர்கள் மூவரும், வேலூரில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்தது தெரியவந்தது. இவர்கள் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்தார்களா? அல்லது சொந்த பயன்பாட்டிற்காக வாங்கி வந்தார்களா? என்பது குறித்தும், இவர்கள் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story