அண்ணனுடன் விளையாடியபோது பரிதாபம்: மாடியில் இருந்து தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலி
மாடியில் இருந்து தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலியானது.
சென்னை,
சென்னை சூளைமேடு தெற்கு கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மொய்தீன்(வயது 31). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பானு(23). இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
இவர்களுடைய 1½ வயதான 2-வது மகன் நசீர் முகமது தனது அண்ணனுடன் கடந்த 4-ந் தேதி மாலை வீட்டின் மாடியில் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பந்து மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டது. இதனை எடுக்க அவனுடைய அண்ணன் கீழே இறங்கினான். இதை பார்த்துக் கொண்டிருந்த நசீர் முகமது மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தான். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நசீர் முகமது ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தான். வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பானு இதனை பார்த்து அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி நசீர் முகமது பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story