அ.தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


அ.தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 13 May 2019 11:00 PM GMT (Updated: 13 May 2019 10:52 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என திருப்பரங்குன்றம் பிரசாரத்தின் போது துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மதுரை,

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட வலையங்குளம், சிந்தாமணி பகுதியில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–

இந்தப் பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து நல்ல சட்டமன்ற உறுப்பினராக முனியாண்டி செயல்படுவார். தமிழகத்தை இதற்கு முன்பாக தி.மு.க.– காங்கிரஸ் கட்சிகள் ஆண்டு இருந்தாலும் ஜெயலலிதா ஆட்சியில் அளித்ததை போல தொலைநோக்கு திட்டங்களை அவர்கள் மக்களுக்கு அளிக்கவில்லை.

2023–ம் ஆண்டுக்குள் குடிசைகளில் வாழும் ஏழை மக்களுக்கு உறுதியாக கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும். தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதி உதவி தொகையை அதிகப்படுத்தி வழங்கியது ஜெயலலிதா வழி வந்த அரசு தான். பொங்கல் தினத்தில் பொங்கல் பொருட்களுடன் ரூ.1000 வழங்கியது அ.தி.மு.க. அரசு தான்.

தேர்தல் முடிந்த உடன் கோர்ட்டு தடையை நீக்கி 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் சாதி, மத கலவரங்கள் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. எந்த காலத்திலும் அ.தி.மு.க.வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. புயல், பூகம்பம் வந்தால் கூட அ.தி.மு.க.வை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டு காலம் மின்வெட்டு இருந்தது. ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் மின் வெட்டு இல்லாமல் மாற்றினார்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே பிரசாரம் செய்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–

குறுக்கு வழியில் மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சராக பார்க்கிறார். அது ஒருபோதும் நடக்காது. பிரியாணி கடையில் சாப்பிட்டுவிட்டு காசு தர மறுக்கும் தி.மு.க.வினரின் அக்கிரமம் தற்போதும் தொடர்கிறது. மாமூல் கேட்கும் பழக்கம் இன்னும் இருந்து வருகிறது. எனவே தி.மு.க.வை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தி.மு.க. மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. காவிரி விவகாரம் உள்ளிட்டவற்றில் வெற்றி தேடித்தந்த அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. அதில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்ற வரலாற்றுப் பெருமையை உருவாக்க வேண்டும். மக்களாகிய நீங்கள் நீதிபதிகள், எஜமானர்கள். நல்ல தீர்ப்பை தாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story