மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி கனவாகவே போகும் - தமிழிசை சவுந்தரராஜன்


மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி கனவாகவே போகும் - தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 14 May 2019 4:45 AM IST (Updated: 14 May 2019 4:26 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலினுக்கு முதல்–அமைச்சர் பதவி கனவாகவே போகும் என்று திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் மேற்கொண்ட பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நிலையூர் கைத்தறி நகர், ஹார்விபட்டி, திருநகர் நெசவாளர் மகாலட்சுமி காலனி பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:–

திருப்பரங்குன்றத்தில் மக்கள் கொடுக்கும் உற்சாக வரவேற்பை பார்க்கும்போது அ.தி.மு.க. வெற்றியை மக்கள் எழுதிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறப் போவதை எண்ணி மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் பதற்றத்தில் உள்ளனர். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தாலும் இதே கூட்டணியைத் தான் அமைத்திருப்பார்.

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை தாக்கி இழிவுபடுத்திய தி.மு.க., தற்போது ஜெயலலிதாவின் மரணம் குறித்து உண்மையை வெளிக் கொண்டு வரப்போவதாக தெரிவிக்கிறது. அதற்கு அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது.

உலக நாயகன் தற்போது உளறல் நாயகனாக மாறி வருகிறார். அரசியலில் கமல்ஹாசன் ஒரு கத்துக்குட்டி. பிரிவினையை பற்றி கமல் பிரசாரம் செய்வதாக பாரதீய ஜனதா கட்சி குற்றம் சாட்டிய நிலையில் அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது கமல்ஹாசன் இப்படிப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் பாரதீய ஜனதா கட்சி உங்களது பேச்சை நிறுத்தும். ஒரு நாள் பேச்சிலேயே டார்ச் லைட் பீஸ் ஆகி விட்டது.

ஒழுக்கமான காந்தியின் கொள்ளுப் பேரன் என சொல்வதற்கு கமலுக்கு எந்த தகுதியும் இல்லை. கமல்ஹாசனின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும். கமல்ஹாசன் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். கி.வீரமணி பிரசாரத்திற்கு வந்தால் தி.மு.க.வுக்கு கிடைக்கும் கொஞ்சநஞ்ச ஓட்டும் கிடைக்காது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தமிழகத்திற்கு வந்தாலும், வரவில்லை என்றாலும் பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கூட்டணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. மு.க.ஸ்டாலின் இரட்டை மனதுடன் இருக்கிறார். 22 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க.– பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தேர்தல் முடிந்தவுடன் முக.ஸ்டாலின் அரியணை ஏறுவார் என்பது கனவாகவே இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story