எச்.விஸ்வநாத்தின் கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை சித்தராமையா கடும் கோபம்


எச்.விஸ்வநாத்தின் கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை சித்தராமையா கடும் கோபம்
x
தினத்தந்தி 14 May 2019 4:36 AM IST (Updated: 14 May 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

எச்.விஸ்வநாத்தின் கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று சித்தராமையா கடும் கோபத்தை வெளிப் படுத்தியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். இந்த நிலையில் ஜனதா தளம் (எஸ்) மாநில தலைவர் எச்.விஸ்வநாத் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது சிறப்பாக செயல்படவில்லை. அவர் சிறப்பாக செயல்பட்டிருந்தால், காங்கிரஸ் ஏன் வெற்றி பெறவில்லை. அவர் மக்கள் தலைவராகவும் உருவாகவில்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு சித்தராமையா பதிலளித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

கூட்டணி அரசில் பின்பற்ற வேண்டிய கூட்டணி தர்மம், எனது வாயை மூடிவைத்துள்ளது. இதனால் எச்.விஸ்வநாத்தின் பொறுப்பற்ற கருத்துகளுக்கு நான் விவரமாக பதிலளிக்க விரும்பவில்லை.

எச்.விஸ்வநாத், பொறுப்பற்ற முறையில் மோசமாக பேசுவதில் புகழ் பெற்றவர். அவருக்கு இறைவன் நல்ல அறிவு வழங்கட்டும். அவரது பொறாமைத்தனமான பேச்சு குறித்து கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிப்பேன்.

என்னை இலக்காக வைத்துக்கொண்டு இவ்வாறு ெபாறுப்பற்ற கருத்துகள் கூறப்படுவது குறித்து ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் கவனம் செலுத்துவது நல்லது. எனக்கு எதிராக முன்பு மந்திரி ஜி.டி.தேவேகவுடா பேசினார். இப்போது எச்.விஸ்வநாத் விமர்சித்துள்ளார். அடுத்தது யார்? என்று தெரியவில்லை. இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Next Story