உள்ளூர் நோயாளிகள் புறக்கணிப்பா? ஜிப்மர் இயக்குனருடன் நாராயணசாமி ஆலோசனை
உள்ளூர் நோயாளிகள் புறக்கணிக்கப்படுவதாக எழுந்த புகார்கள் தொடர்பாக ஜிப்மர் இயக்குனருடன் முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி,
புதுவை கோரிமேட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கே சிகிச்சையில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ள அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை கொடுக்கப்படுவதாகவும், புதுவையை சேர்ந்தவர்களுக்கு அத்தகைய காப்பீட்டு திட்டங்கள் இல்லாததால் புறக்கணிக்கப்படுவதாகவும் முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு புகார்கள் சென்றன. மேலும் வேலைவாய்ப்புகளிலும் மண்ணின் மைந்தர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரங்கள் தொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வாலை தனது அலுவலகத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட காப்பீட்டு திட்டங்களை அமல்படுத்தினால் பயனடையும் நோயாளிகளின் விவரங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.