வாக்கு எண்ணும் மையத்துக்கு அலுவலர்கள்-முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை - கலெக்டர் தகவல்
வாக்கு எண்ணும் அலுவலர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்போன் எடுத்து வருவது தடை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. இதையடுத்து வருகிற 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி, இடைத்தேர்தல் நடந்த நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள், திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் எண்ணப்படுகிறது.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, பழனி சப்-கலெக்டர் அருண்ராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி, நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதனை வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட முகவர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர்களால் நியமிக்கப்பட்டுள்ள முகவர்கள் வாக்கு எண்ணும் நாளில் செல்போனை மையத்துக்கு கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, செல்போனை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். மேலும், வாக்கு எண்ணும் அலுவலர்கள் ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிந்ததும், வேட்பாளர்கள் வாரியாக முடிவுகளை அறிவிக்க வேண்டும். அதேபோல் இதர பணிகளையும் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story