வீரபாண்டி அருகே, பட்டதாரிக்கு பாட்டில் குத்து; பொதுமக்கள் சாலை மறியல்
வீரபாண்டி அருகே பட்டதாரியை பாட்டிலால் குத்தியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உப்புக்கோட்டை,
வீரபாண்டி அருகே உள்ள போடேந்திரபுரத்தை சேர்ந்தவர் செல்வபிரகாஷ் (வயது25). பட்டதாரியான இவர் நேற்று அதிகாலை அந்த ஊரில் உள்ள பொதுக்கழிப்பிடத்துக்கு சென்றுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள மேற்கு தெருவில் வசிக்கும் குட்டை கமல் என்ற ஜெகதீஸ்வரன் (25), ராஜீவ்குமார் (35), விஜயகுமார் (27) ஆகிய 3 பேரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக செல்வபிரகாசை வழி மறித்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். மேலும் அவர்கள் பாட்டிலை உடைத்து செல்வபிரகாஷ் வயிற்றில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த செல்வபிரகாஷ் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இந்தநிலையில் செல்வபிரகாசை பாட்டிலால் குத்தியவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவரது தரப்பை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 8.30 மணியளவில் போடேந்திரபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ், வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்ற செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். எனவே யாரும் பிரச்சினை செய்ய வேண்டாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சாலைமறியல் செய்தவர்கள் சமாதானம் அடைந்து காலை 9.30 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story