கோவை ரெயில் நிலையத்துக்கு செல்லும், 3-வது பாதையில் திடீர் தடுப்புச்சுவர்; பயணிகள் அவதி - வழி ஏற்படுத்தப்படுமா? என எதிர்பார்ப்பு


கோவை ரெயில் நிலையத்துக்கு செல்லும், 3-வது பாதையில் திடீர் தடுப்புச்சுவர்; பயணிகள் அவதி - வழி ஏற்படுத்தப்படுமா? என எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 14 May 2019 4:15 AM IST (Updated: 14 May 2019 5:18 AM IST)
t-max-icont-min-icon

கோவை ரெயில் நிலையத்துக்கு செல்லும் 3-வது பாதையில் திடீரென குறுக்கே கட்டிய தடுப்புச்சுவரால் பயணிகள் அவதிப்படும் நிலை உள்ளது. அதில் செல்ல வழி ஏற்படுத்தப்படுமா? என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கோவை,

தென்னக ரெயில்வே நிர்வாகத்துக்கு வருமானத்தை அள்ளிக்கொடுக்கும் ரெயில் நிலையமாக கோவை உள்ளது. இங்கு வந்து செல்லும் ரெயில்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். இதனால் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த ரெயில் நிலையத்துக்கு செல்ல முன் பகுதியில் ஒரு வாயில், பின்புறத்தில் மற்றொரு வாயில் என்று 2 பாதைகள் உள்ளன.

இதுதவிர கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வழியாக கலெக்டர் அலுவலகத்தின் பின்புறத் தில் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே தாமஸ் கிளப்பையொட்டி ரெயில் நிலையத்துக்கு செல்ல 3-வது பாதை உள்ளது.

இதன் வழியாக சென்றால் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையம் வழியாக அங்கு இருக்கும் 2-வது சுரங்கப் பாதைக்கு மிக எளிதாக சென்று விடலாம். கலெக்டர் அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் இந்த பாதை வழியாக தான் ரெயில் நிலையத்துக்கு சென்று வந்தனர். இது போல் அரசு கல்லூரிக்கு ரெயிலில் வரும் மாணவர்களும் இந்த பாதையை தான் பயன்படுத்தினார்கள். இதனால் காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த வழியாக செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

எனவே அதை 3-வது பாதையாக அறிவித்து பயணிகளுக்கு சில வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதனை ரெயில்வே நிர்வாக அதிகாரிகள் பரிசீலனை செய்ய வில்லை. மாறாக யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு திடீரென்று அந்த 3-வது பாதையின் குறுக்கே தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து 3-வது பாதையை பயன்படுத்தி வந்த ரெயில் பயணிகள் கூறியதாவது:-

கோவை கலெக்டர் அலுவலகம் மற்றும் அதைச்சுற்றி உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் ரெயில் நிலையத்துக்கு செல்ல 3-வது பாதை மிகவும் வசதியாக இருந்தது. இந்த வழியாக முதலாவது நடை மேடைக்கு சென்று விடலாம். அத்துடன் அங்குள்ள 2-வது சுரங்கப்பாதை வழியாக மற்ற நடைமேடைகளுக்கும் எளிதாக செல்ல முடியும். எனவே இது மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.

தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 3-வது பாதையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் திடீரென்று அந்த பாதையின் குறுக்கே தடுப்புச்சுவரை ரெயில்வே நிர்வாகம் கட்டி இருப்பது புரியாத புதிராக இருக்கிறது. வருவாய்த்துறைக்கு சொந்தமான இந்த பாதையில் அனுமதி இன்றி எப்படி தடுப்புச்சுவர் கட்டினார்கள் என்று தெரியவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பாதையில் இருந்து முதலாவது நடைமேடையை அடையும் இடத்தின் அருகே இரும்புக்கம்பிகளை ரெயில்வே நிர்வாகத்தினர் அமைத்தனர். இது பற்றி கேட்ட போது, ஆட்டோ, கார்கள் வருவதை தடுக்கவே அமைப்பதாக கூறினார்கள். இதனால் யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் தற்போது பயணிகள் செல்ல முடியாதவாறு தடுப்புச்சுவர் கட்டியது வேதனை அளிக்கிறது.

3-வது பாதையின் குறுக்கே தடுப்புசுவர் கட்டப்பட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு ஆட்டோக்களில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் ரெயிலை பிடிக்க கூடுதல் செலவு ஆகிறது. குறைந்த கட்டணத்தில் ரெயிலில் செல்ல விரும்பும் பயணிகள் மற்றும் மாணவ- மாணவிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டால், 3-வது பாதையால் பாதுகாப்பு குறைபாடு ஏற்படுவதாக கூறுகிறார்கள். இந்த பாதை சேரும் இடத்தில்தான் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையம் உள்ளது. அங்கு ஒரு போலீசாரை பணியில் அமர்த்தினால் மர்ம ஆசாமிகள் யாருமே ரெயில் நிலையத்துக்குள் வர மாட்டார்கள்.

அதை செய்யாமல், பயணிகள் பாதிக்கும் வகையில் 3-வது பாதையை அடைத்து உள்ளனர். எந்த ஒரு துறையும் மக்களுக்கு சேவை செய்யதான் இருக்கிறது. ஆனால் ரெயில்வே நிர்வாகத்தின் செயல்பாடு பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

வருவாய்த்துறை இடத்தில் ரெயில்நிர்வாகம் தடுப்புச்சுவர் கட்டியும் வருவாய் துறை அதிகாரிகள் ஏன் மவுனமாக இருக்கிறார்கள் என்பதும் புரிய வில்லை. அவர்களும் ரெயில்வே நிர்வாகத்தின் செயலுக்கு துணை போகிறார்களா? என்று தான் நினைக்க தோன்றுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம், ரெயில்வே நிர்வாகத்திடம் பேசி, ரெயில் நிலையத்துக்கு செல்லும் 3-வது பாதையின் குறுக்கே கட்டப்பட தடுப்புச்சுவரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அதில் பயணிகள் வந்து செல்லக்கூடிய வகையில் சிறிய கேட் அமைத்து புதிய வழியை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

எந்த ஒரு பாதையும் பொதுமக்களுக்கு பயன்கொடுத்தால், அதில் வசதிகளை செய்து கொடுப்பது தான் அரசின் கடமை. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வழியாக ரெயில் நிலையத்துக்கு செல்ல 3-வது பாதை அமைக்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு வருவாய்த்துறை சார்பில் ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. தற்போது ரெயில்வே நிர்வாகமே அந்த பாதையின் குறுக்கே தடுப்புச்சுவரை அமைத்து உள்ளது.

இந்த பாதை, பொதுமக்களுக்கு உதவும் என்றால் ரெயில்வே நிர்வாகத்திடம் பேசி, அதில் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த பாதை யாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தடுப்புச்சுவர் கட்டப்பட்டது குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ரெயில் நிலையத்துக்கு வரும் 2 பாதைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த வழியாக மர்ம ஆசாமிகள் யாரும் உள்ளே வருவது கிடையாது.

ஆனால் 3-வது பாதை வழியாக ரெயில் நிலையத்துக்குள் மர்ம ஆசாமிகள் பலர் வந்து விடுகிறார்கள். அதை தடுக்கவே அங்கு தடுப்புச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. இது தற்காலிகமானது தான். இந்த வழியாக பாதை அமைக்கப்பட்டால் உடனடியாக தடுப்புச்சுவர் அகற்றப்படும் என்றனர்.

Next Story